உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் ஈரோடு மாநகராட்சி – தமிழக அரசு கவனிக்குமா?

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கனிராவுத்தர் குளத்தின் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கனிராவுத்தர்குளம் மீட்பு இயக்கம் செயல்பட்டு வருகிறது.

இந்த இயக்கத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள்.
தற்போது கனிராவுத்தர் குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு மீட்புக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க குளத்தை மூடி சாலை அமைக்கக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிக்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக ஈரோடு மாநகராட்சி அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி கனிராவுத்தர் குளம் மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், நீரோடை அமைப்பின் தலைவருமான நிலவன் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நேற்று காலை ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அவர்கள் கனிராவுத்தர் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்தை நோக்கி வந்தனர்.

அவர்கள் பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியைக் கடந்து சென்றபோது, மாநகராட்சி அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று மறுப்பு தெரிவித்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தலைவர் கணகுறிஞ்சி, காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பெரியசாமி, சாமானிய மக்கள் நலக்கட்சியின் மாவட்ட தலைவர் குணசேகரன், தமிழர் கழகம் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு இளைஞர்கட்சி மாவட்ட செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, நாம்தமிழர் கட்சி நிர்வாகி அ.தமிழ்ச்செல்வன், த.மு.மு.க. பொறுப்பாளர் சித்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவைச் செயல்படுத்தாத ஈரோடு மாநகராட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்கின்றனர் போராட்டக்காரர்கள். அரசு கண்விழிக்குமா?

Leave a Response