இது சர்வாதிகாரம் பிற்போக்குத்தனம் – கமல் கண்டனம்

காஷ்மீர் சிக்கல் குறித்து நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

காஷ்மீரில் 370 மற்றும் 35(ஏ) ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கியதில், ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவே நான் கருதுகிறேன். இதில் காஷ்மீர் மக்கள் மட்டும் ஏமாற்றப்படவில்லை. இந்திய மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். கருத்துக்கேட்பு என்பது வழக்கமான செயலாக இல்லாமல் போய்விட்டது.

கடந்தமுறை இந்த அரசுக்கு மக்கள் வாய்ப்பு கொடுத்த போது, ஊழல் இல்லாத நாடாக உருவாக்குவேன் என்றார்கள். இந்த முறை முழு பலம் இருக்கிறது என்ற தைரியத்தில் பாராளுமன்றத்தில் கலந்துரையாடாமல் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இது அவர்களின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

அ.தி.மு.க. இதற்கு ஆதரவு கொடுத்ததில் வியப்பு இல்லை. ஒன்றுபட்ட இந்தியாவாக இருக்க வேண்டும், எல்லோருக்கும் சமமாக உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதெல்லாம் சரி. ஆனால் ஜனநாயகத்தில் கலந்துரையாட வேண்டும் என்ற முறை இருக்கிறது. அது மீறப்பட்டு இருக்கிறது.

இவர்களுடைய போக்கு ‘வேறு ஏதும் பேசாதீர்கள். நாங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருங்கள்’ என்று சொல்ல விரும்புவதாகவே தோன்றுகிறது. குரல்கள் உள்ளவர்கள் நியாயத்துக்காக உயர்த்தியே ஆக வேண்டும். அதைச் செய்ய வேண்டும். அதன் ஒரு துளி தான், நான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இச்சிக்கல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இந்த தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் கொண்டுவரப்பட்டுள்ளது.
370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்.

இது போன்ற முக்கியமான முடிவுகள் மீது பாராளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல், தங்களுக்கு அவையில் இருக்கின்ற பெரும்பான்மை ஒன்றினை மட்டும் கருத்தில் கொண்டு மத்திய அரசு இம்முடிவினை எடுத்திருக்கின்றது.

370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ள்ளப்படுகின்ற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையும் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை சட்டபூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பண மதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப் பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும், பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கமல் தெரிவித்துள்ளார்.

Leave a Response