சன் தொலைக்காட்சியை முடக்க முயலும் மோடி அரசு.


இந்தியாவின் பெரிய தொலைக் காட்சி குழுமங்களில் சன் குழுமமும் ஒன்று. இந்த குழுமத்துக்கு 9.5 கோடி பார்வையாளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்த குழுமத்தின் 33 சேனல்களுக்கு உரிமத்தை அடுத்த பத்து வருடங்களுக்கு புதுப்பிக்க கடந்த வருடம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது. எனவே இதுகுறித்து சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

சன் குழுமத்துக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்துள்ளதற்கான காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த விவகாரத்தில் சன் டிவி மீது குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம், பெட்ரோலியத் துறை தகவல் கசிவு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் பல தொலைக்காட்சி, மற்றும் எஃப்.எம். வானொலி நிறுவனங்கள், குறிப்பாக மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடகங்கள் ஆகியவற்றின் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன, ஆனால் அந்த நிறுவனங்களுக்கான பாதுகாப்பு ஒப்புதல் வழங்கல் மறுக்கப்படவில்லை.

சிபிஐ, மற்றும் அமலாக்கப் பிரிவினர் தொடுத்துள்ள வழக்குகள் பல நிலுவையில் உள்ள நிறுவனங்கள் 3ஜி/4ஜி அலைக்கற்றை ஏலங்களில் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளை இழந்த பல நிறுவனங்கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கபிரிவினர் வழக்குகள் தொடர்ந்துள்ள போதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்.

சன்குழுமம் எந்த விரோத தேசவிரோத நடவடிக்கையிலும், குற்றவியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சன் டிவி நெட்வொர்க் மட்டுமே ஆண்டொன்றுக்கு ரூ.600 கோடி வரி செலுத்தி வருகிறது. நாட்டின் சட்டதிட்டங்களை எப்போதும் கடைபிடித்து வந்துள்ளது.

குழுமத்தில் 5,000 பேர் நேரடியாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பலர் மறைமுகமாக குழுமத்தினால் அன்றாட வாழ்க்கை அளவில் பொருளாதார ரீதியாக பயனடைந்து வருகின்றனர்.

எனவே உங்கள் உடனடி தலையீட்டினால் மட்டுமே அவர்கள் எதிர்காலம் பாதுகாக்கப்படும். எனவே பாதுகாப்பு ஒப்புதல்களை விரைவில் வழங்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியை முடக்க மோடி அரசு முயலுவதாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இக்கடிதம் இருப்பதாகவும் அதற்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடுவதற்கான முன்னோட்டமே இந்தக்கடிதம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response