நிம்மதியையும் வேதனையையும் ஒருங்கே தந்த ஃபனி புயல்

வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அந்தப்புயலுக்கு ஃபனி என்று பெயரிடப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

புயல் என்றாலே மக்கள் அஞ்சும் அளவுக்கு கடந்த காலங்களில் தமிழகம் பெரும் பாதிப்பைச் சந்தித்து இருந்தாலும், தற்போது வறட்சி நிலவுவதால் ஃபனி புயலால் போதிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவசர ஆலோசனைக் கூட்டமும் நடத்தியது.

இந்த நிலையில் தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடக்கும் என்று கூறப்பட்ட ஃபனி புயல் தற்போது திசை மாறிச் சென்றுவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துவிட்டது.

இதனால் புயல் பாதிப்பு இல்லை என்கிற நிம்மதி ஏற்பட்டாலும் ‘புயலோடு மழை வரும்’ என்று எதிர்பார்த்து இருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் ஏப்ரல் 28 மதியம் கூறியதாவது….

‘ஃபனி’ புயல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 1,050 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு இருக்கிறது. அது தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இந்த தீவிர புயல் 29-ந் தேதி (இன்று) அதி தீவிர புயலாகவும் வலுப்பெறக்கூடும்.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ந் தேதியும் (நாளை), 1-ந் தேதியும் (நாளை மறுதினம்) வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வரக்கூடும். அதன்பிறகு திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும்.

இதனால் ஃபனி புயல் தமிழகத்தில் கரையைக் கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. தமிழகத்துக்கு இந்தப் புயலினால் நேரடியான பாதிப்பு எதுவும் இல்லை.

இந்தப் புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளை நெருங்கி வரும்போது, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

30-ந் தேதியும், 1-ந் தேதியும் மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு திசையில் இந்த புயல் நகர்ந்து செல்லும்போது, 3-ந் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து அதிகளவில் நிலக்காற்று வீசும்.

ஆகவே தமிழகத்தின் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கலாம். அப்போது சாதாரண நாட்களை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி வரை அந்தப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பு இல்லை என்கிற நிம்மதியைக் கொடுத்த ஃபனி புயல், மழை இல்லை வெப்பம் அதிகரிக்கும் என்கிற வேதனைகளையும் கொடுத்திருக்கிறது.

Leave a Response