முஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவுக்கு தடை – பதட்டம் அதிகரிப்பு

இலங்கையில் ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட பல இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தன. 9 தற்கொலைப்படையினர் இந்தத் தாக்குதலை நடத்தினார்கள். இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றனர். அவர்கள் உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு இலங்கை அரசு தடை விதித்தது.

இந்தச் சூழலில், இலங்கையில் பொது இடங்களில் பர்கா உள்பட முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அவசர கால அதிகாரத்தை பயன்படுத்தி, இலங்கை அதிபர் சிறிசேனா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் முகத்தை மூடும் வகையிலான உடைகளை அணிய யாருக்கும் அனுமதியில்லை என்றும் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்காவை அணிந்த ஒரு ஆண் பிடிபட்டார்.அதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

இருப்பினும் மத நம்பிக்கையில் தலையிடுவதாக இஸ்லாமியர்கள் சிலர் கோபப்படுகிறார்கள். இதனால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response