கமலுக்கு பதில் சொல்ல உதயநிதி போதும் – திமுக முடிவு

நடிகர் கமல்ஹாசன், திமுக இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், திமுகவை மீண்டும் கமல் விமர்சித்தார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிராம சபைக் கூட்டம் 25 ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றும், அப்போது என்ன செய்தீர்கள் எனவும் வினவினார்.

அத்துடன், சட்டப்பேரவையில் தாம் சட்டையை கிழித்துக்கொண்டு நின்றதில்லை எனவும் திமுக தலைவர் ஸ்டாலினை மறைமுகமாக சாடினார்.

கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரியில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தான் அரசியல் மட்டுமே பேசுவதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனை உதயநிதி ஸ்டாலின் நேற்று விமர்சித்திருந்தார். அதில், “கமல்ஹாசன் அறியாமையில் பேசுகிறார். திமுக தலைவர் முதல்முறை கிராமத்திற்கு போவதாக கமல் கூறுகிறார். அது தவறானது. அவரது விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் எனக்கூறி உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களில் பேசிய பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் அதில் இடம், நாள் உள்ளிட்ட தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கமல் பற்றிய கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளிக்க மறுத்த நிலையில், கமலின் பெயர் குறிப்பிட்டு உதயநிதி பதில் சொல்லியிருப்பதன் மூலம் கமலுக்கு பதில் சொல்ல உதயநிதி போதும் என்று திமுக நினைத்திருக்கிறது என்பது தெரிகிறது.

Leave a Response