5 மாநிலத் தேர்தல் முடிவுகள் – முழுவிவரம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

சத்தீஷ்கர் சட்டமன்றத்துக்கு நவம்பர் 12 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாகவும், மத்தியபிரதேசம், மிசோரம் சட்டமன்றங்களுக்கு நவம்பர் 28 ஆம் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா சட்டமன்றங்களுக்கு டிசம்பர் 7 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இவற்றில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது.

அங்கு முதலமைச்சராக இருந்த சந்திரசேகர ராவ், தனது அரசின் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்த நிலையில், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார்.

5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த 5 மாநில தேர்தல் ஒரு ‘மினி பொதுத்தேர்தலாகவே’ கருதப்பட்டது.

இந்த நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று (டிசம்பர் 11,2018) எண்ணப்பட்டன.

ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

வசுந்தராராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

இறுதியில் 199 தொகுதிகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதீய ஜனதாவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இங்கு ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. சுயேச்சையாக வெற்றி பெற்றவர்களில் சிலர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் என்பதால், அவர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 116 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 115 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இன்னும் ஒரு உறுப்பினரின் ஆதரவு இருந்தால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். எனவே பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 68 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. ஆளும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைத்தன. சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளுக்கு 4 இடங்கள் கிடைத்தன. முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் கட்சி காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அந்த கட்சியால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை.

சத்தீஷ்கர் மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியை பிடித்து இருக்கிறது.

ஆந்திராவை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் முதன் முதலாக சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆட்சி அமைந்தது. இப்போது அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 88 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதாவுக்கு ஒரு இடம் கிடைத்தது. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

மிசோரம் மாநிலத்தில் முதல்-மந்திரி லால்தன் ஹாவ்லா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இங்கு மொத்தம் உள்ள 40 இடங்களில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இதன்மூலம் இங்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்து உள்ளது.

இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு 5 இடங்கள் கிடைத்தன. ஒரு தொகுதியில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. மிசோ மக்கள் இயக்கம் 8 இடங்களில் வெற்றி பெற்றது.

Leave a Response