தமிழக எம்.பிக்களில் முதலிடம் பிடித்த சத்யபாமா – தொகுதி மக்கள் கொண்டாட்டம்

2014 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்திய ஒன்றிய அளவில் பெரும் வெற்றியைப் பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது. மோடி பிரதமரானார்.

அத்தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. 2 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி வென்றது.

2019 ஆம் ஆண்டில் இந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், இந்திய அளவில் ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை பதிவேடு 80 விழுக்காடு உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 விழுக்காடாக உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகைப்பதிவேடு 78 விழுக்காடு உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 43.6 விழுக்காடு உள்ளது. அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா 87 விழுக்காடு நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார்.

இந்த அறிக்கை வெளியானதும் திருப்பூர் தொகுதி மக்கள் சத்யபாமாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

எங்கள் பிரச்சினையைச் சொன்னதும் அதுகுறித்து அக்கறையுடன் கேட்டு உடனே பாராளுமன்றத்தில் பேசுவது அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளைச் சந்தித்துச் சொல்வது சிறிதும் தயக்கமின்றி மத்திய அமைச்சர்களிடம் நேரம் வாங்கி நேரடியாக அவர்களைச் சந்திப்பது என்று நூறு விழுக்காடு எங்களுக்காக அவர் உழைத்தார். அவரைத் தேர்ந்தெடுத்தது நாங்கள் செய்த சரியான செயல். அடுத்த ஆண்டும் அவரையே வெற்றி பெறச் செய்வோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

சத்யபாமா இதுபற்றிக் கூறும்போது,மாண்புமிகு இதயதெய்வம் அம்மா என்னை நம்பி எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்கள். அவர்களின் நல்லாசியுடன், தொகுதி மேம்பாட்டிற்காகவும், மக்களின் நலனுக்காகவும் திருப்பூர் எம்.பி யின் குரல், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் என்றார்.

இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எல்லாத் தொகுதிகளுக்கும் அமைந்தால் நல்லது.

Leave a Response