இலங்கையில் பிரதமர் பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அக்டோபர் மாதம் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா அதிரடியாக நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.
எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 113 உறுப்பினர்களை ராஜபக்சேயால் திரட்ட முடியவில்லை.
இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடந்த அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். இதை எதிர்த்து ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.அதில், அதிபரின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதன்பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் 2 முறை ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த இரண்டிலும் ராஜபக்சேவுக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். ராஜபக்சே, விக்ரமசிங்கே இருவருமே தாங்கள் பிரதமர் பதவியில் தொடர்வதாக கூறி வருவதால் இலங்கை அரசியலில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களையும் சிறிசேனா அழைத்துப் பேசி நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றம் அமைதியாக நடந்தது.
அப்போது அதிபரின் யோசனைப்படி நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக் குழு ஒன்றை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் 12 பேர் கொண்ட தேர்வுக்குழு பட்டியலை வெளியிட்டார். அதில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் 5 உறுப்பினர்கள் இடம் பெற்று இருந்தனர்.
அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியில் 5 உறுப்பினர்களும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்களும் தேர்வுக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று சபாநாயகர் அறிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் ஏற்கனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் தேர்வுக்குழுவிலும் விக்ரமசிங்கேயின் கையே ஓங்கியது.
இதைச் செரிக்க முடியாத ராஜபக்சே ஆதரவாளர்கள் சபாநாயகரின் முடிவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசாங்கம் எங்களது தலைமையில் நடப்பதால் எங்களுக்கே தேர்வுக்குழுவில் அதிக இடம் ஒதுக்கவேண்டும் என்று கத்தினர். பின்னர் சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்வுக்குழு நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விதமாக ஓட்டெடுப்பு நடத்தும்படி ஜனதா விமுக்தி பெரமுனா எம்.பி. விஜிதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சபாநாயகரின் முடிவுக்கு ஆதரவாக 121 ஓட்டுகள் கிடைத்தன. எதிராக, அதாவது ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் 3-வது முறையாக நடத்தப்பட்ட ஓட்டெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பலத்த அடி விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிபர் மைத்திரி மற்றும் ராஜபக்சே ஆகியோர் செய்வதறியாது திகைத்து நிற்பதாகச் சொல்லப்படுகிறது.