ஐ நா அவையில் இந்தியாவின் செயல் – மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்

ஐ.நா. சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்கக் கோரும் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் ஓங்கி ஒலித்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபையின், 3–வது குழுவில் மரண தண்டனையை ஒழிக்கும் வகையில், மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க கோரும் வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இத்தீர்மானத்தின் மீது நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. 30 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை. எனவே, பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிப் பெற்றது.

இத்தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதுபற்றி ஐ.நா. சபைக்கான இந்திய தூதரகத்தின் முதல் நிலைச் செயலாளர் பவுலோமி திரிபாதி ‘‘இந்த வரைவு தீர்மானமானது, மரண தண்டனையை ஒழிக்கிற வகையில், அத்தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கக் கோருகிறது. ஆனால், நாங்கள் எதிராக வாக்களித்தோம். ஏனெனில், மரண தண்டனைக்கு ஆதரவான சட்டம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அரிதிலும் அரிதாகத்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஆனால், இதில் தேவைப்படுகிற அனைத்து விதமான சட்ட நடைமுறைகளையும் இந்தியா கொண்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் மரண தண்டனைக்கு எதிராக நீண்டதொரு இயக்கம் நடந்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவின் நிலைப்பாடு மனித உரிமைகளுக்கு எதிரானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

Leave a Response