மோடி பற்றிய ரஜினி கருத்துக்கு கஸ்தூரி பதிலடி

சென்னை விமான நிலையத்தில் நவம்பர் 12 அன்று ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை தொடர்பாக அவருடைய கருத்து கேட்கப்பட்டது. அதற்கு, எந்த 7 பேர்? எனக்குத் தெரியாது என்றார்.

இதனால் அவர் மேல் கடும் விமர்சனங்கள் வந்தன.அதற்குப் பதிலளிக்க,
சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த்,“ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்து ரஜினிகாந்துக்கு ஒன்றுமே தெரியாது என்ற மாயையை சில பேர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரியும் என்றால் தெரியும் என சொல்கிறேன். தெரியாது என்றால் தெரியாது என சொல்கிறேன். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்றும் கிடையாது. அன்றைக்குக் கேட்ட கேள்வி தெளிவாக இல்லை என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு அவர் பதிலளித்தார்.

பாஜக ஆபத்தான கட்சியா என்பது குறித்து ரஜினிகாந்தின் கருத்து என்ன?

நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்கவில்லை அதனால், நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கட்சியைத் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெறுகின்றன.

பாஜகவுக்கு எதிரான மகா கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

10 பேர் ஒருத்தரை எதிர்த்தால் யார் பலசாலி? அந்த 10 பேரா? அல்லது 10 பேரும் சேர்ந்து எதிர்க்கும் அந்த ஒருவரா? நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

நரேந்திரமோடி பலசாலி என சொல்ல வருகிறீர்களா?

இதைவிட தெளிவாகச் சொல்ல முடியாது. தேர்தலில் தான் தெரியும்.பாஜகவுடன் கூட்டணி வைப்பதா என்பது பற்றி அப்போது பார்க்கலாம்.

என்று கூறினார்.

ரஜினியின் இந்தக் கருத்துக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. அவர் கூறியிருப்பதாவது….

கௌரவர்கள் பலசாலிகள். அவரை எதிர்த்து போரிட்ட பாண்டவர்களுக்கு படைபலம் குறைவு.

ராவண பலசாலி. ராமரின் வானரசேனைக்கு அவ்வளவு வலிமை இல்லை.

பலம் வெல்வதில்லை, தர்மமே வெல்லும் என்பது சான்றோர் வாக்கு

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Leave a Response