மோடி திருட்டில் ஈடுபட்டுள்ளார் – போட்டுத் தாக்கும் ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதிக்கு செப்டம்பர் 24 அன்று சென்று இருந்தார். அங்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியதாவது….

நாட்டின் இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், மற்ற பிரிவினருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது, மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் இன்னும் நிறைவேற்றவில்லை. அடுத்த தேர்தலில் பாஜக அரசை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்.

வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய விஜய் மல்லையா, மெகுல் சோக்சி, நிரவ் மோடி ஆகியோருக்கு மோடி அரசு உதவியுள்ளது. ரபேல் போர்விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் விலையை வெளியிடுகிறேன் என்று கூறிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன்பின் மறுத்துவிட்டார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்து அவரிடம் பேசியபோது, அவர் ரபேல் போர்விமானத்தின் விலையை வெளியிடலாம் என்றார்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும், 300 மடங்கு அதிகமாக ரபேல் போர் விமானத்தை மோடி அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஆனால், நாட்டில் காவல்காரர் என்று சொல்லிக்கொள்பவர் அமைதியாக இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ரபேல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிப் பேசினேன். . ரபேல் விமானத்தை ஏன் மூன்று மடங்கு விலை கொடுத்து வாங்கினீர்கள் என்று கேட்டபோது அவர் எனது கண்களை நேருக்கு நேர் பார்த்தப் பேசவில்லை. அரசு நிறுவனமான ஹெச்ஏஎல் வழங்கப்பட்ட ஒப்பந்தம் அங்கிருந்து தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

நாட்டின் காவல்காரர் என்று சொல்லிக்கொள்பவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் காவல்காரர் ராணுவ வீரர்கள், வீரமரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் பையில் இருந்து ரூ.30ஆயிரம் கோடியை எடுத்து தொழிலதிபருக்கு கொடுக்கிறார்.

அனைத்து விஷயங்கள் குறித்தும் நாட்டின் காவல்காரரால் பேச முடிகிறது, ஆனால், ரபேல் ஒப்பந்தம் குறித்து பேசுவதில்லை. அவருக்கு அது குறித்துப் பேச துணிச்சல் இல்லை. அவரால் பேச மட்டுமே முடியும், ஆனால், கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாது.

தொழிலதிபர் விஜய் மல்லையா இந்த நாட்டை விட்டுத் தப்பிச் செல்லும் போது, நிதி அமைச்சர் அருண்ஜேட்லியைச் சந்தித்துவிட்டுச் சென்றுள்ளார். அவரை மத்திய அரசுதான் தப்பிக்க அனுமதித்துள்ளது.

ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் திருடனைத் தப்பிக்கவிட்டால், தப்பிக்கவிட்ட குற்றத்துக்காக போலீஸை சிறையில் அடைப்பதுதான் முறையாகும். மோடியின் ஆட்சியால் 10 தொழிதிபர்களுக்குதான் நன்மையாகும்.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றெல்லாம் மோடி வாக்குறுதியளித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்றாமல் இருக்கிறார். மத்தியில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆட்சியை அகற்றி காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Leave a Response