சிலை கடத்தல் வழக்கில் சிக்கினாரா எச்.ராஜா?- தமிழக அரசியலில் பரபரப்பு

பாமக நிறுவனர் ராமதாசு ஜூன் 28 அன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகளைக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சிகளுக்கு தமிழக அரசுத் தரப்பில் போடப்படும் முட்டுக்கட்டைகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவர் பொன்.மாணிக்கவேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதைவிட, அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதில் தான் ஆட்சியாளர்கள் தீவிரமாக உள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, நேர்நின்ற விசாரணை அதிகாரியான பொன்.மாணிக்கவேல், கோவில் சிலைகளை பாதுகாத்து வைப்பதற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; சிலைக் கடத்தல் தடுப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் எனக்குத் தெரியாமலும், உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறாமலும் மாற்றப்படுகிறார்கள். சிலைக் கடத்தல் குறித்த எனது விசாரணைக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறது என குற்றம்சாட்டினார். அதைக் கேட்ட உயர் நீதிமன்ற நீதிபதி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் ஆணையிட்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள கோயில்களுக்கு சொந்தமான விலை மதிப்பற்ற நூற்றுக்கணக்கான ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இவற்றை மீட்பது குறித்த காவல்துறையினரின் விசாரணைகள் கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டிருந்த நிலையில் தான், இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணை அதிகாரியாக பொன்.மாணிக்கவேலுவை நியமித்து கடந்த ஆண்டு ஆணையிட்டது.

அதைத் தொடர்ந்து சிலைக்கடத்தல் குறித்த வழக்குகளில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் ராஜராஜன் கோயிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டு குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜராஜன், உலகமாதேவி சிலைகளை மீட்க கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பயனளிக்காத நிலையில், அச்சிலைகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு அண்மையில் மீட்டு வந்து தஞ்சை பெரியகோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

தமிழகத்திலிருந்து உலகின் பல நாடுகளுக்கும் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மாணிக்கவேல் தலைமையிலான குழு தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தான் அவரது செயல்பாடுகளுக்கு தமிழக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டைப் போடத் தொடங்கியுள்ளனர். கொள்ளையடித்து கடத்தப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை

கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்குகளை மாணிக்கவேல் குழு தீவிரமாக விசாரிக்கும் போது, அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய மறுப்பதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை குறித்து தனி விசாரணை நடத்தப்படவேண்டும்.

சிலைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தமிழகத்தின் இந்நாள் அமைச்சர்கள் சிலருக்கும், முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கட்சி வேறுபாடுகளின்றி கடந்த காலங்களில் ஆட்சி செய்த இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த சிறப்புக் குழு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமானது.

ஆனால், அண்மையில் பொன்.மாணிக்க வேலுவை அழைத்த முதல்வர், இதுதொடர்பான வழக்குகளில் அவசரம் காட்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், அதை ஏற்க மறுத்துவிட்ட அவர், விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் தான், அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக ஆட்சியாளர்கள் விளக்கமளிக்க வேண்டும்

என்று கூறியிருந்தார்.

மருத்துவர் இராமதாசு வெளிப்படையாகக் குற்றம் சாட்டியும் முதல்வர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

இந்நிலையில், சிலை கடத்தலில் பாஜகவின் எச்.ராஜாவுக்குத் தொடர்பு இருக்கிறதென்றும் அதை மாணிக்கவேல் கண்டுபிடித்ததாலேயே அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்து மதத்தின் மீதும் இந்துக்கடவுள் மீதும் தீவிர ஈடுபாடு கொண்ட அவரா இப்படிச் செய்வார்? என்கிற கேள்வியும் எழுகிறது.

இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response