எழுத்தாளர் எஸ்.அர்ஷியா மறைந்தார்

எஸ்.அர்ஷியா ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா.

பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கணையாழி, செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் ஆனந்த விகடன், குமுதம் கல்கி, அமுதசுரபி ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் எழுதிய “ஏழரைப்பங்காளி வகையறா” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

2010ஆம் ஆண்டுக்கான அழகிய நாயகி அம்மாள் விருதும் இந்தப்புதினத்துக்கு வழங்கப்பட்டது. இவரது இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி மதுரையின் சமகால அரசியலும் பெருவணிகமான ரியல் எஸ்டேட் தொழிலும் கைகோர்க்கும்புள்ளிப்பற்றிப் பேசும் முக்கிய நாவலாகும். அப்பாஸ்பாய்தோப்பு மதுரை வைகைதென்கரையில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நாவல்.

கரும்பலகை நாவல் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளை பேசும் நல்லதொரு நாவலாகும்.

1959 ஏப்ரல் 14 ஆம் நாள் பிறந்த அவர் 2018 ஏப்ரல் 7 இரவு மரணமடைந்தார்.

அவருக்கு பேராசியர் அ.ராமசாமி எழுதியுள்ள இரங்கற் குறிப்பு….

அர்சியாவுக்கு அஞ்சலி
=======================
ஒருவருடத்திற்கு முன்பாக இருக்கலாம்.

இதயத்தின் இயக்கம் சரியில்லை என்பதைக் காட்டும் அறிகுறிகள் இவை என்பதை உணர்ந்தே அந்தக் குறிப்பை முகநூலில் எழுதியிருந்தார். இடதுகைப்பக்கம் வலியிருப்பதாகவும், முதுகு வலியும் தெரிகிறது என்று சொல்லியிருந்தார். அவரது வயது, தொடர்ச்சியான செயல்பாடு, நகைச்சுவையுணர்வு போன்றவற்றைக் கவனித்திருந்த நண்பர்கள் பலரும் உடல் காட்டிய அந்தக் குறிப்புகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. வாயுக்கோளாறாக இருக்கும் என்பதுபோல ஆலோசனைகளை வழங்கினார்கள். நான் அந்தக் குறிப்பின்கீழ் உடல் சொல்லும் சங்கேதங்களைப் புரிந்துகொள்ளுங்கள் என்று எழுதியதாக நினைவு.

வரலாற்று நூல்கள் எழுதுபவராகவும் வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பவராகவும் வெளிப்பட்ட அர்சியாவின் ‘ மதுரை நாயக்கர் வரலாறு” ( ஆர். சத்தியநாதய்யர் எழுதிய ஹிஸ்டரி ஆப் மதுரை நாயக்) நூலின் வெளியீட்டுக் கருத்தரங்கில் தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அந்த நூலின் ஆங்கில மூலத்தை நான் எனது முனைவர் பட்டத்திற்காகப் படித்த நூல். அந்த மொழிபெயர்ப்பு சரளமான மொழிபெயர்ப்பு. அவரது பெயரோடு கபரஸ்தான் கதவு, மரணத்தில் மிதக்கும் சொற்கள் முதலான சிறுகதை நூல்களும், மொழிபெயர்ப்புகளாக நிழலற்ற பெருவெளி, திப்பு சுல்தான், பாலஸ்தீன், மதுரை நாயக்கர் வரலாறு, பாலைவனப்பூ, கோமகட்டுமாரு போன்றனவும், சரித்திரப் பிழைகள், ஆதாரம் போன்றனவும் கிடைக்கின்றன.

அவரது எழுத்துகள் நெருக்கமாகத் தோன்றியதின் காரண்ம் இழந்ததின் மீதான காதல் வகைப்பட்ட விருப்பம்தான். வேலைக்காக வெளியூர்களில் வாழ நேரும்போதுதான் சொந்த ஊர்ப்பற்று அதிகமாகிவிடுகிறது. சொந்த ஊரைப் பற்றிய எழுத்துகளும் அதிகம் பிடித்துப் போய் விடுகின்றன. வட்டார எழுத்து அதன் தீவிரத்தன்மையைக் காட்டிய 1970- 80-களிலும் எழுதிய மதுரைமாவட்ட எழுத்தாளர்கள் அந்த அடையாளங்களை எழுத்தில் கொண்டு வந்துவிட வேண்டுமென நினைக்கவில்லை. மைய நீரோட்ட எழுத்தில் கலந்துபோகவே விரும்பினார்கள். சி .சு.செல்லப்பாவின் வாடிவாசல் தொடக்க விதிவிலக்கு. ஜி.நாகராஜனின் கதைகளின் கதைகளுக்கான நிலவியல் பின்னணியாக மதுரை நகரம் இருந்தது என்றாலும் கதைகளின் மையவிவாதங்கள் எல்லாம் மதுரைக்கும், மதுரை மாவட்டத்திற்குமானவை என்று சொல்லமுடியாது. கர்ணனின் எழுத்துகளுக்கான அடையாளமும் அப்படித்தான் .

இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் பின்னணியிலும் புனைகதைகள் வந்துகொண்டிருக்கின்றன. உமாமகேஸ்வரி, சு.வேணுகோபால் போன்றவர்களின் கதைகளை அப்படி வாசித்திருக்கிறேன். இவர்கள் எல்லாரையும்விட அர்சியாவின் புனைகதைகள் முழுமையாக மதுரை நகரின் பின்னணியில் எழுதப்பெற்றவை. ஏழரைப் பங்காளி வகையறா என்ற தலைப்பில் இருந்த மதுரை வாசமே வாசிக்கத்தூண்டியது.மதுரையின் வட்டார வரலாற்றை நிலவியல் நிலவியல் முரண்பாடுகளோடு எழுதியவராக அவரது, பொய்கைகரைப்பட்டி, அப்பாஸ்பாய் தோப்பு, சொட்டாங்கல் போன்றன அமைந்துள்ளன.
பரபரப்பான செய்திக்கட்டுரையாளராகத் தராசு பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் அவரது புனைகதைகளின் மொழிநடையில் தாக்கம் செலுத்தியுள்ளன, கரும்பலகை, அதிகாரம் போன்ற நாவல்களின் மொழிநடையில் இதனைக் காணமுடியும்.

தொடர்ந்து எழுதிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் பயணித்துக்கொண்டும் இருந்த அர்சியா இயக்கத்தை நிறூத்திவிட்டார் என்ற தகவல் ‘ நெருநல் உளனொருவன் இன்றில்லை என்பதிவ் வுலகு’ என்ற வலிமையான சொற்கூட்டத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது.

Leave a Response