சீமானுக்கு ஆதரவாக வைகோவை விமர்சிக்கும் ஈழப்பெண்ணின் காட்டமான கடிதம்

வணக்கத்திற்குரிய வைகோ அவர்களே…

மாவீரர் குடும்பத்தில் உடன்பிறந்த ஐந்து சகோதரர்களில் இரண்டு பேரை களத்தில் பலி கொடுத்த பெண்போராளி நான் புலம்பெயர் தேசத்தில் இருந்து பேசுகிறேன்…

புலிகள் அடிபாட்டின் போது உங்கட ஆவேச பேச்சுக்களை கேட்டுக்கொண்டே சண்டையிட்டதாக நீங்கள் கதைத்த காணொளியை கண்டபோதே எழுத நினைத்தேன், இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.

பள்ளிக்கூட சிறு பொடியன்கள் நுள்ளி வைத்தான் கிள்ளி வைத்தான் என்று கதைப்பதை போல “மீம்ஸ்” போட்டதாக நீங்கள் பொங்கியெழுவதை காணும்போது சிரிப்பு தான் வருகிறது…

தலைவரை 8 நிமிடம் மட்டுமே சந்தித்துவிட்டு வந்து உலகெங்கும் நாம்தமிழர் கட்சி பிச்சை எடுப்பதாக தாங்கள் கதைத்த காணொளியை பார்த்தேன், இன விடுதலைக்காக அவர்கள் பெறும் நிதிக்கு பிச்சை என்று பெயர் சூட்டினால், 40 ஆண்டுகள் எம்மிடம் நீங்கள் பெற்ற நிதிக்கு என்ன பெயர் சூட்டுவது?

எம் புலம்பெயர் உறவுகள் உயிரை கொடுத்து உழைத்து உங்களுக்கு தராத நிதியையா பிறருக்கு தந்து விட்டோம்?

பதிலுக்கு எங்கட நாட்டுக்கும் சனத்துக்கும் நீங்கள் சிந்திய உழைப்பென்ன?
40 ஆண்டுகால உங்கட அரசியலில் நீங்கள் எடுத்த ஒரு முடிவாவது சரியானதாக, எமக்கு சாதகமாக இருந்ததுண்டா?

இறுதிக்கட்ட போரில் நாங்கள் இறந்து கிடந்தபோது,
8 நிமிடம் தலைவரை சந்தித்த சீமான் அண்ணாச்சியின் அலைபேசி எமக்காக அழுததே…
1 மாதம் முழுதும் தங்கி எங்கட சீருடையில் பயிற்சி எடுத்த உங்கட அலைபேசி அனைத்து வைக்கப்பட்டிருந்ததே? ஏன் ஐயா?

8 நிமிடம் மட்டுமே தலைவரை நேரில் பார்த்த சீமான் அண்ணன் மீது எமக்கு வந்த நம்பிக்கை 1 மாதம் ஒன்றாக தங்கிய உங்கள் மீது வராதபோதே தெரியவில்லையா? உங்கள் மீது எமக்கிருந்த நம்பிக்கை இப்போது இல்லை என்று…

சீமான் அண்ணாச்சி தலைவருடனான 8 நிமிட சந்திப்பை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், எடுத்த புகைப்படம் போலி என்று சொல்லுவது உங்களுக்கே முரணாக தெரியவில்லையா?
இறுதிவரை களத்தில் நின்ற ஊடகவியலாளர் சிவகரன் அண்ணா உட்பட ஆயிரம் போராளிகள் அந்த படத்திற்கு சாட்சி கூற இன்னும் உலக நாடுகளில் உள்ளார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியாதா?
தெரிந்தும் இப்படி பேசுவது உங்கள் சுயலாப அரசியலின் உச்சக்கட்டம் இல்லையா?

உலகெங்கும் இருந்து தமிழீழ நம்பிக்கையை விதைத்திருக்கும் எம் போன்ற ஈழ உறவுகள் மத்தியில் உங்கட சுயலாப அரசியல் சண்டைகள் மேலும் சோர்வை ஏற்படுத்துகிறது ஐயா…

வீட்டை இழந்து நாட்டை இழந்து வாழ தேசமின்றி வந்த தேசத்தில் அவமானப்பட்டு அடிமைகள் போல அந்நியனுக்கு உழைத்து இன்னமும் இந்த உயிரை நாங்கள் பிடித்து வைத்திருப்பது, என்றாவது ஒருநாள் எம் தேசம் மலரும் என்ற நம்பிக்கையில் மட்டும் தான். தயவு செய்து இத்தனை ஆண்டுகாலம் எமக்காக நீங்கள் செய்தது போதும்…இனி எமக்காக எங்கட சனத்திற்காக நீங்கள் போராடவிட்டாலும் பரவாயில்லை…

உண்மையும் நேர்மையுமாக களத்தில் நிற்கும் அண்ணன்மார்களை,
அக்காமார்களை,
நாம்தமிழர் போராளிகளை தொந்தரவு செய்யாமல் இருந்தால் அதுவே எமக்கு போதும்…

தலைவருடனேயே இருந்த கருணா துரோகம் செய்த வரலாறும், தலைவர் முகத்தை கூட பார்த்திராத பல நூறு பேர் கரும்புலியான வரலாறும் தாங்கள் அறிவீர்.
அந்த வகையில் சீமான் அண்ணாச்சிக்கு புலம்பெயர் தமிழர் கூட்டம் ஆதரவு தருவதென்பது தலைவரை சந்தித்தார் என்பதற்காக அல்ல..
மாறாக தலைவர் தந்த தத்துவதையே சிந்தித்தார் என்பதற்காக…

கருணா யார் ?
கரும்புலி யார்? என்பதை காலம் சொல்லும்…

ஸ்டாலின் வேட்டியில் தேத்தண்ணி கொட்டி விட்டதாம் துடைக்க கூப்பிடுகிறார்கள்,
நீங்கள் போகலாம்….

– ஈழமகள்_அபிஷேகா

Leave a Response