வயிற்றுப்பாட்டுக்கு இங்கிலீசா? – வைரமுத்துவுக்கு சூடான கேள்வி

சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் தமிழாற்றுப்படை நிகழ்வில் தனித்தமிழ் மீட்ட மாவீரர் மறைமலை அடிகள் குறித்து வைரமுத்து பேசிய உரையில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“எந்த மொழியையும் கற்றுக் கொள்ளுங்கள், அவைகள் எல்லாம் வயிற்று மொழிகள். உங்கள் உயிர் மொழி தாய்மொழியாகிய தமிழ்தான்.”

இந்த மொழிக் கொள்கைக் குழப்பத்தை வைரமுத்துவிடம் மட்டும் இல்லை, பல பல தமிழர்களிடமும், ஏன், பல தமிழுணர்வாளர்களிடமே காண முடிகிறது. நான் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து ஆங்கிலம் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்டு நேற்று பதிவிட்ட போது, கீழே கருத்துத் தெரிவித்தவர்கள் சோற்றுக்கு ஆங்கிலத்தின் தேவையை மறுக்க முடியாது என்றார்கள்.

சோற்றுக்கு என்பதும், வைரமுத்து சொல்வது போல் வயிற்றுப்பாட்டுக்கு என்பது தரும் பொருள் ஒன்றுதான். பொருளீட்டலுக்கு ஆங்கிலம், நம் உணர்வை உசுப்பேறிற்றிக் கொள்வதற்குத் தமிழ். இதுதான் இவர்களின் நிலைப்பாடு.

சோற்றுக்கு ஒரு மொழி, உயிருக்கு உணர்வுக்கு ஒரு மொழி உலகில் எங்கேனும் உண்டா? வயிற்றுப்பாட்டைத் தீர்த்து வைக்க நம் தமிழ் மொழிக்கு வக்கில்லை என்றால், பிறகு என்ன எழவுக்கு இந்தத் தமிழைப் படிக்க வேண்டும் எனத்தான் தமிழர்கள் கேட்பார்கள்.

இன்னும் வைரமுத்து ஒரு படி மேலே போய் வயிற்றுப் பாட்டுக்கு எத்தனை மொழிகளும் கற்கலாம் என்கிறார். அப்படியானால், இந்தி, சமஸ்கிருதம் என எந்த மொழியையும் தமிழன் கற்க வேண்டும் என்பார் போலும். ஆனால் நம் தமிழை உயிராய் மதிக்க மறக்கக் கூடாதாம்.

தமிழர்களே, நான் மீண்டும் கூறுகிறேன். கல்வியில், வேலைவாய்ப்பில் நாம் தமிழை இழந்தால், நம் மொழி அதிகம் போனால் இன்னும் ஒரு நூற்றாண்டு தாங்காது. சென்னையில் இன்று கிட்டத்தட்ட தமிழ்வழிப் பள்ளிகளே இல்லை. ஒவ்வொன்றாக இழுத்து மூடிக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூரில் தாய்த் தமிழ் பள்ளி நடத்திக் கொண்டிருக்கும் எழில் சுப்பிரமணியம் கூறுகிறார், சென்னையில் மட்டுமல்ல, திருப்பூரிலும் தமிழ்வழிப் பள்ளிகள் அழிந்து, ஆங்கிலவழிப் பள்ளிகள் வளர்ந்து வருகின்றன என்கிறார்.

நாம் தமிழுக்குச் சவப்பெட்டி தயாரித்து விட்டோம். சவப்பெட்டிக்கு ஆணிகளும் அடிக்கத் தொடங்கி விட்டோம். இன்னும் சில ஆணிகளே மிச்சம். அவற்றையும் அடித்து முடித்து விட்டால், மொத்தமாகத் தமிழன்னையைக் குழிதோண்டிப் புதைத்து அங்கு இங்கிலீஷ் மாதாக்குச் சிலை எழுப்ப வேண்டிதுதான். இது உண்மை, வெறும் வேடிக்கையில்லை.

தமிழ்ச் சொந்தங்களே, இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் அழிப்பு என்பது, ஐநா வரையறையின்படி, ஓர் இனப்படுகொலை. இந்தப் படுகொலை தமிழர்களின் முழு இசைவுடன் நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் பெரும் சோகம்.
தமிழ்நாட்டின் வைரமுத்துக்கள் ஒரு பக்கம் மறைமலையடிகள், பாரதியார் புகழ் பாடுவார்கள். ஆனால் அவர்களின் மொழிக் கொள்கைக்கு மாறாகத் தன் வீட்டுப் பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்துக்கு, அதுவும் உயர்தர கான்வென்டுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். பின்னர், தன் சொந்தக் குடும்பக் கொள்கையையே தமிழ்நாட்டின் கொள்கையாகவும் ஆக்குவார்கள். வைரமுத்துக்கள் அவர்களின் வயிற்றுப் பாட்டுக்குப் பிள்ளைகளை ஆங்கிலமயமாக்கி விட்டு, அடுத்த வீட்டுப் பிள்ளையும் ஆங்கிலத்தில் படிக்க அறிவுரை கூறுவார்கள். அதாவது, அவர்களின் வீட்டுக் கொள்கையையே நாட்டுக் கொள்கையாக்குவார்கள்.

அப்படியானால், தமிழில் படிப்பது சோறு பெற்றுத் தராதா? அப்படி இல்லை நண்பர்களே, இங்கிலீஷ் படிப்பது இன்னொருவன் முன் கைகட்டி நின்று நாலு காசு சம்பாதித்து வயிற்றுப்பாட்டை நிறைவு செய்யும் என்பது உண்மைதான். ஆனால் தமிழில் படைப்பியல் நோக்கில் படிப்பது நம்மை பெரு அறிவியலர்களாக்கும், பெரும் ஆலை முதலாளிகளாக்கும், பெரும் செல்வந்தர்களாக்கும், தமிழ்க் கல்வியைக் கொடுமுடியில் கொண்டு நிறுத்தும். இது எப்படி? நான் ஏற்கெனவே ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே! என்ற நூலில் விவாதித்துள்ளேன்.

தமிழாற்றுப்படை நடத்தும் வைரமுத்தே, தமிழரின் வயிற்றாற்றுப்படைக்கு மட்டும் ஆங்கிலத்தை முன்னிறுத்தி ஏமாற்றும் வேலையைத் தயவுகூர்ந்து நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் மெச்சும் பாரதியார்தான் கூறினார்: “பிள்ளைகளை இங்கிலீஷ் மீடியத்துக்கு அனுப்பும் முட்டாள் பெற்றோர்கள்.”

– நலங்கிள்ளி

Leave a Response