மாவீரர்களின் புனிதக்கனவை நிறைவேற்ற உறுதியேற்போம் – சீமான் மாவீரர்நாள் அறிக்கை

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 27-11-2017 (திங்கட்கிழமை) அன்று மாலை 5 மணியளவில் கிருஷ்ணகிரி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேவராஜ் மகால் திடலில் (அரசுக் கலைக் கல்லூரி எதிரில்) நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், கலைக்கோட்டுதயம், இராவணன், கதிர்.இராஜேந்திரன், நல்லதுரை, ஹுமாயுன் மற்றும் களஞ்சியம்.சிவக்குமார், கொள்கைப்பரப்பு செயலாளர் ஜெயசீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாண சுந்தரம், ஜெகதீசப் பாண்டியன், அறிவுச்செல்வன், துரைமுருகன் மற்றும் அகழ்வான், ஆன்றோர் அவைப் புலவர் மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், அருண் ரங்கராசன், செய்திப்பிரிவு செயலாளர்கள் பாக்கியராசன் மற்றும் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு வள்ளல், சோழிங்கநல்லூர் இராஜன், காஞ்சி சஞ்சீவிநாதன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திக், கிருஷ்ணன் மற்றும் சாரதி உள்ளிட்ட மாநில, மண்டலப் பொறுப்பாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று மாவீரர்களுக்கு சுடரேந்தி வீரவணக்கம் செலுத்தினர்.

இறுதியாக சீமான் வீரவணக்கவுரையாற்றினார்.

நிகழ்வுக்கு முன் மாவீரர் நாள் வீரவணக்கம் தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிடச் சுதந்திரமாகச் சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது!

சுதந்திரமற்ற மனித வாழ்வு அர்த்தமற்றது! சுதந்திரமென்பது கடைச் சரக்கல்ல. அது வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உயிரை விலையாகக் கொடுத்துப் போராடிப்பெற வேண்டிய புனிதமான உரிமை!

உயிர் உன்னதமானதுதான் நான் அறிவேன்.ஆனால் அந்த உயிரினும் மேலானது எமது உரிமை! எமது விடுதலை! எம்மினப் பெருமை! உயிரை இழக்கலாம்..! உரிமையை இழக்கலாமா..?

உயிரை இழப்பது தனிப்பட்ட ஒருவருடைய இழப்பு! உரிமையை இழப்பதென்பது ஒரு தேசிய இனத்திற்கான இழப்பு! – என்று நம் தேசியத்தலைவர் முன்வைத்த இலட்சிய முழக்கங்களையேற்றுப் பொன்னைக் கொடுத்தவர்கள், பொருளைக் கொடுத்தவர்கள், மண்ணைக் கொடுத்தவர்கள் வரிசையிலே மண்ணின் மீட்சிக்காகத் தங்களின் உயிரையே கொடையாகக் கொடுத்த வள்ளல்கள் நமது மாவீரர்கள்!

நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் சுவாசித்த காற்றை நிறுத்திக்கொண்டவர்கள்! அடிமை வாழ்விலிருந்து உரிமைபெற்று பெருமையோடு நாம் வாழவேண்டுமென்பதற்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்டு வீரவிதைகளாக மண்ணில் புதைந்தவர்கள்!

அந்த மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற இந்நாளில், எந்தப் புனிதக் கனவைச் சுமந்து நின்றார்களோ? எதற்காகத் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்தார்களோ? அந்த இலட்சியக் கனவை நிறைவேற்றுவோம் என்று உறுதியேற்போம்!

எங்கள் மாவீரர்களே..!
உங்களுக்கு எங்கள் புரட்சிகரமான வீரவணக்கம்!
நாம் தமிழர்!

– இவ்வாறு மாவீரர் நாள் அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

Leave a Response