இதயமே இல்லாதவர்களுக்குத்தான் ஓவியாவைப் பிடிக்காது

காயத்ரி, ரைஸா, ஜூலி மூவருக்கும் ஒரு எழவு தெரியவே மாட்டேன் என்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப ஓவியாவை அநியாயமாக அக்கிரமமாக ஓரத்தில் தள்ளுகிறார்கள். இது மக்களுக்கு ஓவியாவின் மீது மிகப் பெரிய அன்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. ஓவியா ஆரவ்விடம் காதலை வெளிப்படுத்தினால் காயத்ரிக்கு எங்கே நோவுகிறது? ஜூலியையும் ரைஸாவையும் ஓவியாவுக்கு எதிராகத் தயார்ப்படுத்துகிறார். வெளியே வந்தால் யாருமே தன்னை மதிக்க மாட்டார்கள் என்று காயத்ரிக்குப் புரியவே இல்லை.

ஆரவ்: எல்லாரும் பார்க்கிறாப்ல எனக்கு மஸாஜ் பண்ணாதே
ஓவியா: சரி பண்ணலே, ஆனா நான் பண்ணினதை எனக்குத் திருப்பிக் கொடு. இனிமே பண்ணலே. ப்ராமிஸ். திருப்பிக் கொடுக்கலேன்னா பண்ணுவேன்.
ஆரவ் பேய்முழி முழிக்கிறார்.
நம் சமூக நல விரும்பிகள் பலரும் இதெல்லாம் ஏற்கனவே எழுதிக் கொடுத்தது என்கிறார்கள். இந்த அளவுக்கெல்லாம் எழுதிக் கொடுக்க ஸ்க்ரிப்ட் ரைட்டர்ஸ் இருக்கிறார்களா என்ன, ஜெயமோகனால் கூட முடியாது போங்கய்யா…

பிக் பாஸின் அறிவுரையின்படி ஆரவ் ஓவியாவை அழைத்து அன்று நான் உன்னிடம் தனியாக என்ன சொன்னேன் என்று கேட்கிறார். அதற்கு ஓவியா, நீ என்ன சொன்னேன்னா, எனக்கு என் வாழ்க்கை ரொம்ப முக்கியம், எனக்கு என் தொழில் ரொம்ப முக்கியம், என்று தொடங்கி ஒரு வசனம் சொல்கிறார். அப்போது அவர் முகபாவமும் சொல்பாவமும் அட அடா… சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. இதயமே இல்லாதவர்களுக்குத்தான் ஓவியாவைப் பிடிக்காது.

காலம் மாறி விட்டது. ஓவியா வெளிப்படையாக ஐ லவ் யூ சொல்கிறார். ஆரவ் பதுங்குகிறார். இதுவோ தொடர்ந்து நடக்கிறது. ஆரவ்வின் மனநிலை… செய்யலாம். ஆனால் வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் பின்னால் வேறொரு பெண்ணுடனான திருமணம் பாதிக்கும். லவ் இல்லை என்றால் வெளிப்படையாக ஓவியாவிடம் சொல்லி விட வேண்டியதுதானே? ஏன் பம்முகிறார்? நேற்று ஆரவ்வின் ரஜாய்க்குள் ஓவியா நுழைய எத்தனிக்கும் போது ஓவியா ஆரவ்விடம் ஒன்னும் பண்ண மாட்டேன், பயப்படாதே என்று சொன்னதைக் கேட்டு ஆரவ்விற்காக ரொம்பப் பரிதாபப்பட்டேன்.

அவனை ஏன் உங்களில் ஒருத்தர் கூடப் போய் நிறுத்தவில்லை. இங்கேயிருந்து ஏறிக் குதித்தால் என்ன ஆவது? பிந்து கேள்வி.
காயத்ரி: இது என்ன பத்தாவது மாடியா? ஏறிக் குதிச்சா கால் உடையும். அவ்ளோதானே?
என்ன ஒரு அருமையான சமூகம் பார்த்தீர்களா? இதைத்தானே மாய்ந்து மாய்ந்து நாப்பது வருஷமா எழுதிக்கிட்டிருக்கேன்? என் எழுத்தை எப்படித் தத்ரூபமா நடித்துக் காண்பிக்கிறார்கள் பாருங்கள். ஆணவம், ஆதிக்கம், திமிர் அத்தனை குணநலன்களும் நிரம்பப் பெற்றவர்களாக காயத்ரி மட்டும் அல்ல; நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இருக்கிறோம். கேமராவில் பதிவாகிறது என்று தெரிந்தே இப்படி என்றால் ரகசியத்தில் எப்படி இருப்பார்கள்!!! இவரைத்தான் குழந்தை குழந்தை என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் கணேஷும், சிநேகனும், ஷக்தியும்…

–சாருநிவேதிதா

Leave a Response