
சேலம் குண்டுக்கல்லூர் நோட்ரிடேம் ஹோலிகிராஸ் பள்ளியின் 7-ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பசுமை கலாம் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. அம்மாபேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை நடிகர் விவேக் கொடியசைத்து தொடங்கி வைத்து நடந்து சென்றார்.
இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் நோட்ரிம்டேம் ஹோலிகிராஸ் பள்ளியில் முடிவடைந்தது. இதையடுத்து அங்கு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக அம்மாபேட்டை ஹோலி கிராஸ் பள்ளியில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-
ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று (நேற்று) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்தது. இருந்தாலும் அங்கு செல்லாமல் மாணவர்களுடன் கலாமின் நோக்கத்தை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன்.
அன்றும், இன்றும், என்றும் நமக்கெல்லாம் “பிக்பாஸ்” அப்துல்கலாம் தான். அவர் மறைந்தாலும் அவருடைய ஆன்மா நமக்கு உந்துசக்தியாக விளங்கி கொண்டிருக்கிறது. இதனால் 2020-ல் இந்தியா வல்லரசாக அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் அனைவராலும் ரசிக்க கூடிய தலைவர் அப்துல்கலாம். நாட்டில் 30 சதவீத மரங்கள் தான் இருக்கிறது. இதனால் தான் மழை இன்றி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் அனைவரும் விவசாயிகள் தான். அதனால் விவசாயத்தை காக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருகிறது. மழை பெய்ய வேண்டும் என்றால் மரங்கள் அதிகளவு வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் மாதந்தோறும் ஒரு மரக்கன்று நட வேண்டும். அதேபோல் விவசாயத்தை பாதுகாக்க இளைஞர்கள், மாணவர்கள் நீர் நிலைகளை தூர்வார முன்வரவேண்டும்.
இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாணவர்கள் கையில் மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த வேண்டும். நோட்ரிடேம் ஹோலிகிராஸ் மூலம் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இன்றைய தினம்(நேற்று) 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
