சங்கம் 4 விழாவில் மூத்தவழக்கறிஞரின் சாதித்திமிர்ப் பேச்சு, ஜெகத்கஸ்பர் என்ன செய்யப்போகிறார்?

சென்னையில் ஜகத்கஸ்பரின் முயற்சியில் சங்கம் 4 விழா நடந்துவருகிறது, இவ்விழா பல்வேறு வகைகளில் கவனத்தை ஈர்த்துவருகிற வேளையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியூட்டக்கூடிய நிகழ்வும் நடந்திருக்கிறது. அது பற்றி சித்தார்த்கந்தசாமியின் பதிவு…

நான் பெருமையாக கருதும் எல்லா விஷயங்கள் மீதும் சீக்கிரமே மண் விழுவதை கவனித்து வந்திருக்கிறேன். நேற்று மாலை அப்படி ஒரு பெருமையில் மண் விழுந்தது. சென்னையில் நடைபெறும் சங்கம்-4 நிகழ்வுகள் பற்றி முந்தாநாள்தான் என் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். நேற்று காலை கூட, முகநூலில் பிரபலமாக இருக்கும் நண்பர்கள் சிலரிடம் பேசி, அவர்கள் இந்த நிகழ்வுகளில் ஒன்றிலாவது கலந்துகொண்டு, அதுபற்றி தங்கள் பக்கங்களில் எழுதவேண்டும் என்றும், இந்த நல்ல விஷயம் நிறைய பேரை சென்றடைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தேன்.
18.2.15 மாலை ஆறு மணிக்கு, இரண்டாம் அமர்வின் முதல் நிகழ்வாக ‘சேர நாடு’ என்ற தலைப்பில் இரா.காந்தி என்பவர் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. இவர் ஒரு மூத்த வழக்கறிஞராம்.
இந்த நபர் மேடையேறியதுமே “நாங்க கவுண்டங்க…” என்றுதான் தொடங்கினார். அன்னாரின் குரலில் அவ்வளவு பெருமை! கிராமத்து வாழ்க்கைப் பற்றி பேசுகிறேன் என்றவர், “நாசுவன்” என்கிற சொல்லை தாராளமாக பிரயோகிக்கத் தொடங்கினார். எனக்கு பயங்கர அதிர்ச்சி. சரி, கொஞ்சம் பொறுக்கலாம் என்று உட்கார்ந்திருந்தேன். ம்ஹூம். அவர் நிறுத்தவில்லை. எனக்கு படபடக்க ஆரம்பித்துவிட்டது. தன் அகங்காரப் பேச்சைத் தொடர்ந்த இரா.காந்தி அடுத்து “சக்கிலியன்” என்கிற சொல்லை பலமுறை பிரயோகிக்க ஆரம்பித்தார். இந்த இரண்டு சொற்களையும் இவர் பயன்படுத்தியது அதிர்ச்சி என்றால், அந்த சொற்களை அவர் உச்சரித்தவிதம் பேரதிர்ச்சி. அப்படி ஒரு அதிகாரத் திமிருடனும், அலட்சியத்துடனும், இழிவான தொனியிலும் அந்த வார்த்தைகளை உச்சரித்தார். அதற்கு மேல் என்னால் பொறுக்க முடியவில்லை. சட்டென்று எழுந்து “சார்! என்ன நீங்க கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம ‘நாசுவன்’, ‘சக்கிலியன்’னு பேசுறீங்க?” என்று கோபத்துடன் கேட்டேன். அதற்கு அவர் என்னவோ சொன்னார், அது எனக்கு புரியவில்லை. உடனே, பார்வையாளர்களை நோக்கி, ” என்ன இவர் இப்படி பேசுறார்? இங்க யாருக்குமே உறைக்கலையா?” என்று ஆதங்கப்பட்டேன். எனக்கு ஆதரவாக யாரும் பேச முன்வரவில்லை. சங்கம் -4இன் ஒருங்கிணைப்பாளர் ஜெகத் கஸ்பர் மேடையின் ஓரத்தில் அமர்ந்திருக்க, அவரை “ஃபாதர்… ஃபாதர்…” என்று சத்தமாக கூப்பிட்டேன். அவர் மேடையில் தோன்றியதும், “சார், நீங்க சொல்லுங்க, அவர் பேசுறது சரியா?” என்று கேட்க அவர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்துவிட்டார். எதுவும் பேசவில்லை. அதன்பின் நடந்த விஷயங்கள் என்னை மென்மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரங்கிலிருந்த ஒருவர் கூட இரா.காந்தியை கண்டிக்க முன்வரவில்லை என்பதோடு மட்டுமல்லாது, என்னை அதட்டவும் ஆரம்பித்தார்கள்.
அதற்குமேல், எனக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. இருக்கையை விட்டு எழுந்து வெளியே வர ஆரம்பித்தேன். தொடர்ந்து அவர் “நான் எங்க கிராமத்து வாழ்க்க பத்தி பேசுறேன்… இங்க எதுவும் மாறாது. ஜாதியெல்லாம் அழியக் கூடாது*” என்றார். நான் கோபத்துடன் “வெளங்கிரும்…” என்றபடியே அரங்கைவிட்டு வெளியேற ஆரம்பித்தேன். தொடர்ந்து “இந்த மாதிரி முட்டாள்கள எப்படி கூட்டிட்டு வர்றாங்க…” என்று உரக்க சொல்லியபடியே வெளியே வர, அரங்கில் இருந்த கணிசமானோர் என்னை நோக்கி “ஹே… ஹே…” என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். என்னை பயம் தொற்றிக்கொண்டது. நான் இருப்பது சென்னையில்தானா, இங்கே நடப்பது சங்கம் -4ஆ, இல்லை ஏதாவது சாதி சங்க கூட்டமா, மேடையில் பேசியவர் இந்த நூற்றாண்டை சேர்ந்தவர்தானா, பார்வையாளர்கள் நிஜமாகவே சங்கம் 4க்கு வந்தவர்கள்தானா என்று மனதில் பல கேள்விகள். அவ்வளவு மோசமாக அதட்டியவர்கள் என்னை துரத்தி வந்து அடிக்கவும் செய்யலாம் என்று பதட்டத்துடன் பேரூந்தில் ஏறி தப்பி வீடு வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்து நீண்டநேரமாகியும் என் முகம் வெளிறிப் போயிருந்தது. நான் அரங்கில் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் நிச்சயம் தர்ம அடி கிடைத்திருக்கும். வந்திருந்தவர்கள் பொதுமக்களா இல்லை இந்த நபரின் உறவினர்களா, இல்லை லாரியில் கொண்டுவந்து இறக்கிய அடியாட்களா என்று எனக்கு புரியவில்லை. இந்த நபருக்கு பெயர் காந்தி, இவர் ஒரு வழக்கறிஞர். என்னத்தைச் சொல்ல.
நான் நாவிதர் இனத்தைச் சேர்ந்தவனோ, ‘சக்கிலியன்’ என்று அந்த நபர் இழிவாக குறிப்பிட்ட அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவனோ அல்ல. ஆனால் இந்த நாகரீக உலகில் எவ்வளவு கண்ணியமான வார்த்தைகள் இருக்கின்றன?! “முடி திருத்துபவர், துப்புரவு பணி செய்பவர்” என்றுதானே ஒரு படித்த மனிதன் சொல்வான்? இந்த நபருக்கு வயது எழுபத்தியெட்டாம். வழக்கறிஞர் வேறு. எனினும் எவ்வளவு மோசமான ஜாதிய திமிர்! அதுவும் ஒரு பொதுவெளியில்! நான் இவரை ஒருமையில், ஜாதிய ரீதியில் இழிவாக பேசினால் இவர் பொறுத்துக் கொள்வாரா? இந்த சொற்களைப் பேசுவதற்குப் பேர் கருத்து சுதந்திரமா?
இந்த மோசமான சம்பவத்தால் சங்கம் 4இன் மீது நான் மரியாதை இழந்துவிடவில்லை. ஆனால் இந்த மாதிரியான ஒரு நபர் எப்படி ஒரு அறிவார்ந்த அவையில் பேச அழைக்கப்பட்டார் என்பதும், அரங்கிலிருந்தவர்கள் எப்படி ரவுடிகள் போல் செயல்பட்டார்கள் என்பதும் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஜெகத் கஸ்பரை சந்தித்து அவரது கருத்தைக் கேட்டு பதிவிடுகிறேன். இந்த விஷயத்தில் அவருக்கு பதில் சொல்ல கடமையுண்டு. அழைப்பிதழில் சாதியம் பற்றி அவர் மிகவும் ஆதங்கப்பட்டிருக்கிறார். அதற்கு பெரும் முரணாக இருக்கிறது நேற்று இரா.காந்தி என்பவர் பேசிய பேச்சு.
* -ஜாதியெல்லாம் அழியக் கூடாது என்றாரா, இல்லை ஜாதியெல்லாம் அழியாது என்றாரா என்பது எனக்கு துல்லியமாக நினைவில்லை.

2 Comments

  1. if it is true..we will protest against gandhi and kasparraj.this is against constitutional right.in the name of tamil development.. they have no right to degrade any commounity and religion.

  2. இவருடைய junior advocate. கேரளா கவர்னர் உட்பட அனைவரும் இவர் சாதியை சார்ந்தவர்கள். தற்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் இவரது சட்ட அலுவலகத்தை சார்ந்த இவரது சாதிக்கார்ர்கள். இவரது சாதிய வெறி இன்று தான் தெரியும் என்பது மிக மிக தாமதமான ஒன்று. கண்டிப்பாக கஸ்பாருக்கு தெரிந்திருக்கும்.

Leave a Response