மாணவர் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு, சிங்கள அரசு அதிர்ச்சி

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் வெளியிட வேண்டும் எனக்கோரி யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா அறிவித் துள்ளார். இந்தப் பேரணியில் அனைவரையும் அணி திரண்டு ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

இலங்கையின் இறுதிப் போர் தொடர்பான விசாரணை அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட வேண்டும் என்றும், அதனை ஒரு போதும் ஒத்திவைக்கக் கூடாது என்றும் கோரி பிப்ரவரி 24 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி ஒன்று நடை பெறவுள்ளது. யாழ். பல்கலைக் கழக மாணவரகளின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணிக்கு பல்வேறு அமைப்புக்களும் தமது ஆதரவை வழங்கியுள்ளன.

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பேரணிக்கு தனது முழு ஆதரவை வழங்குவதுடன் தமிழ் மக்கள் அனைவரை யும் இதில் அணி திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ.நா. பொதுச் செயலருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கும் ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழகச் சமூகம் முன்னெடுக்கும் இந்தப் பேரணிக்கும் ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை. சேனாதிராசா குறிப்பிட்டார்.

மாணவர்கள் போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்த நிகழ்வின் மூலம் ஒட்டுமொத்த ஈழமக்களின் உணர்வு பேரெழுச்சியுடன் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறதென்று சொல்லப்படுகிறது. இதனால் ஐநா அவையின் முடிவில் ஏதெனும் மாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தில் சிங்கள உயர்மட்டம் இருக்கிறதென்றும் சொல்லப்படுகிறது.

Leave a Response