ஒரு சில நாட்களில் ரஜினியை வீழ்த்திய கமல்

நடிகர் கமல்ஹாசன், ஜூலை 18 ஆம் தேதி இரவு அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து,

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

அன்புடன் நான்

என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்று கமல்ஹாசன் பேட்டி கொடுக்க அதற்கு எதிர்வினையாக கமலைக் கைது செய்யவேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கோபம் காட்ட, உடனே கமலுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்த சூழலில் இப்பதிவுகள் வந்திருப்பதால், விரைவில் கமலஹாசன் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற பேச்சு பரவலாக வந்துவிட்டது.

கடந்த சில வாரங்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சுகள் பரவலாக இருந்தன. ஒரு சில நாட்களில் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி கமல் முன்னிலைக்கு வந்துவிட்டார்.

ரஜினி, பொதுவான சிக்கல்களில் கருத்து எதுவும் சொல்லவில்லை. ஆனால் கமல் பொது விசயங்களிலும் கருத்துச் சொல்லி வருவதால் அரசியல் விசயத்தில் ரஜினியைப் பின்னுக்குத் தள்ளி கமல் முன்னால் வந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response