அணு உலை எதிர்ப்பை இந்தியாவெங்கும் கொண்டு செல்கிறார் உதயகுமார்

தமிழகத்தில் அணு உலைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிற உதயகுமார், அப்போராட்டத்தை இந்தியாவெங்கும் கொண்டு செல்லும் [முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவு..

‘அணுத்தீமையற்ற இந்தியா’ பெறுவதற்கான தேசியப் பிரச்சாரம்

கன்னியாகுமரி முதல் திப்ருகர், அஸ்ஸாம் வரை தொடர்வண்டிப் பயணம், பிப்ருவரி 2015

இந்திய நாட்டிலுள்ள ஏழைகள் உள்ளிட்ட அனைத்து மக்களின் வளர்ச்சியையும் நாங்கள் விரும்புகிறோம்; எனவே மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை வரவேற்கிறோம் என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நமக்கு வேண்டிய மின்சாரத்தை நமது நிலத்தை, நீரை, காற்றை, கடலை, கடலுணவை, கால்நடைகளை, பயிர்களை அழிக்காத சூரியஒளி, காற்றாலை, கடல் அலை போன்றவை மூலம் பெறுவோம் என்று சொல்கிறோம். காரணம் உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து பாதுகாப்பு, தண்ணீர் பாதுகாப்பு, காற்றுப் பாதுகாப்பு போன்றவை எரிசக்தி பாதுகாப்பைவிட முக்கியமானவை.

ஆனால் இந்திய அரசு ஆறு முதல் பத்து அணுஉலைகள் கொண்ட அணுப்பூங்காக்களை நாடெங்கும் (தமிழகத்தில் கூடங்குளம், கல்பாக்கம்; ஆந்திரத்தில் கொவ்வாடா; ஒடிசாவில் பதி சோனாப்பூர்; மேற்கு வங்கத்தில் ஹரிப்பூர்; கர்நாடகாவில் கைகா; மராட்டியத்தில் ஜைதாப்பூர், தாராப்பூர்; குஜராத்தில் மித்தி விர்தி; ராஜஸ்தானில் பன்ஸ்வாடா; ஹரியானாவில் கோரக்பூர்; மத்திய பிரதேசத்தில் சுட்கா) நிறுவ முயன்று வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, ஜப்பான், தென் கொரியா போன்ற பல நாடுகளிடமிருந்து அணுஉலைகள் வாங்கத் திட்டமிட்டுள்ளார்கள். அமெரிக்கா அண்மைக் காலங்களில் அணுஉலை எதையும் அவர்கள் நாட்டில் கட்டவில்லை. 2௦11-ஆம் ஆண்டு நடந்த ஃபுகுஷிமா விபத்துக்கு பிறகு, ஜப்பான் தனது 52 அணுஉலைகளையும் மூடி வைத்திருக்கிறது. ஜெர்மனி அனைத்து அணுஉலைகளையும் படிப்படியாக மூடி வருகிறது. இந்த உதவாத தொழிற்நுட்பத்தின் குப்பைக் கிடங்காக இந்தியா மாற வேண்டுமா?

இந்திய அரசு ஆஸ்திரேலியா, கசக்ஸ்தான், நமீபியா போன்ற நாடுகளிடமிருந்து யுரேனியம் வாங்குகிறது. ஆனால் இதில் எந்த நாடுமே ஓர் அணுமின் நிலையத்தைகூட அவர்கள் நாட்டில் நிறுவவில்லை.

அணுமின்சாரம் மலிவானது அல்ல: நிலம் கையகப்படுத்துவது, கட்டுமானத்துக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்வது, திட்டமிடாத அதிகப்படியானச் செலவுகள், லஞ்சம், ஊழல், ஊதாரித்தனம், பாதுகாப்புச் செலவினங்கள், அணுஉலையை செயலிழக்கச் செய்வதற்கான செலவு, அணுக்கழிவை அப்புறப்படுத்தி, பாதுகாக்கும் செலவு – இப்படியாக விரயமிக்க அணுமின்சாரத் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் மிக அதிகம் செலவாகிறது. அரசு மக்கள் பணத்தை இரகசியமாக வாரியிறைக்கிறது.

அணுமின்சாரம் தூய்மையானது அல்ல: அணுமின் நிலையக் கட்டுமானங்களில், அவற்றை இயக்குவதில் பயன்படுத்தப்படும் ஏராளமான இரும்பு, சிமென்ட், பெட்ரோல், மின்சாரம் போன்றவற்றைப் பாருங்கள். இவையனைத்தும் சூழலை மாசுபடுத்தித்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அணுமின் நிலையக் கழிவுகள் 48,000 ஆண்டுகள் மக்கிப் போகாத மிகவும் ஆபத்தான கதிர்வீச்சை வெளியிடும் தன்மை கொண்டவை. இவற்றை அரசு என்ன செய்யப் போகிறது? எங்கே பாதுகாத்து வைக்கப் போகிறது? அரசு இதுவரை எந்த பதிலும் தரவில்லை.

அணுமின்சாரம் பாதுகாப்பானது அல்ல: இந்தியா மக்கள் தொகை அதிகமான, அடர்த்தி மிக்க நாடாக இருப்பதால், ஒரு சிறிய விபத்துக்கூட கோடிக்கணக்கான மக்களுக்கு பெரும்கேடு விளைவிக்கும். போபால் நகர மக்களைப் பாருங்கள். கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ முதல்வர்கள், பிரதமர்கள் வந்துபோன பிறகும், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித்தொகையோ, மருத்துவ உதவிகளோக் கொடுக்கவில்லை. ஆபத்தான கழிவுகளைக்கூட இன்னும் அப்புறப்படுத்தவில்லை.

அணுமின்சாரம் உடல்நலனுக்கு உகந்தது அல்ல: அணுமின் நிலையங்கள் மிக அதிக அளவிலான சூடான, கதிர்வீச்சுக் கலந்தத் தண்ணீரை நாள் முழுவதும், ஆண்டுக்கணக்கில் வெளியிடுகின்றன. இது கடலையும், ஏரிகளையும், நதிகளையும், அவற்றிலுள்ள மீன் உணவையும் நச்சாக்குகிறது. நிலத்தடி நீரை நாசமாக்குகிறது. அணுஉலைகளிலிருந்து அயோடின், சீசியம், ஸ்ட்ராண்டியம், டெலூரியம் போன்ற கதிர்வீச்சுக் கனிமங்கள் வெளியாகின்றன. இவையெல்லாம் பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. ஏராளமானக் குழந்தைகள் உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர். கதிர்வீச்சு நோய்கள், புற்றுநோய் என எண்ணற்ற நோய்கள் வருகின்றன.

அணுமின்சாரம் அறநெறிப்பட்டது அல்ல: நமது தலைமுறைக்கு நாற்பது ஆண்டுகள் மின்சாரம் கிடைக்கிறது என்பதற்காக, இந்திய அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் அந்நிய நாடுகளின் அணுசக்தி நிறுவனங்களிடமிருந்து நிறைய கமிஷன் கிடைக்கிறது என்பதற்காக, நமது குழந்தைகளின், வருங்காலத் தலைமுறையினரின் இயற்கையை, எதிர்காலத்தை அழித்தொழிப்பது எந்த வகையில் அறநெறியாகும்?

எரிசக்திப் பிரச்சினைக்கு அணுமின்சாரம் பதிலே அல்ல: அதிக அளவில் கார்பன் மாசு ஏற்படுத்தும் அணுசக்தி புவி வெப்பமாதலுக்கு ஓர் ஏற்ற பதிலே அல்ல. ஆபத்தானக் கழிவுகளை உருவாக்கி அணுசக்தி நமது பூமியை நஞ்சாக்குகிறது. அணுசக்தியிலிருந்து வெறும் 2 விழுக்காடு மின்சாரம்தான் நாம் இப்போது பெறுகிறோம்; இது கணிசமான அளவில் உயரப் போவதே இல்லை.

எரிசக்தி சுதந்திரம் என்ற பெயரில், சமூகப் பொருளாதார, அரசியல் சுதந்திரத்தை இழக்கலாமா? நமது இழப்பீடு சட்டத்தை அவமதித்து அந்நிய நாடுகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கலாமா? அடிமைகள் போல நடந்துகொண்டு, நாட்டை மறுகாலனி ஆதிக்கத்துக்குள் தள்ளலாமா? கூடவேக் கூடாது! தலைவர்கள்போல சிந்தித்து நமது பிரச்சினைகளை படைப்பாற்றலுடன், நமக்கே உரித்தான வழிகளில் தீர்க்க முயல்வோம்.

மகாத்மா காந்தி சொல்கிறார்: “இந்த பூமி, காற்று, நிலம், நீர் அனைத்தும் நமது மூதாதையர்களிடமிருந்து நாம் பெறுகிற வாரிசு உரிமையல்ல; மாறாக நமது குழந்தைகளிடமிருந்து நாம் பெறுகிற கடன். இவற்றை நாம் எப்படிப் பெற்றுக்கொண்டோமோ, அதே போல அவர்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

வாருங்கள், அணு ஒப்பந்தங்கள், யுரேனியச் சுரங்கங்கள், அணுமின் நிலையங்கள், அணுக்கழிவுக் கிடங்குகள், அணுவாயுதங்கள் எதுவுமில்லாத “அணுத்தீமையற்ற இந்தியா” படைப்போம்!

Leave a Response