கண்ணகி கோயில் தமிழகத்துக்குத்தான் சொந்தம் – கோயில் வாசலில் சீமான் அதிரடி

தமிழக–கேரள மாநில எல்லையில் அமைந்து உள்ள கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா மே 10 ஆம் நாள் நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவி கயல்விழியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்காக அவர், குமுளியில் இருந்து ஜீப் மூலம் கோவிலுக்கு வந்தார். பக்தர்களோடு, பக்தர்களாக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கண்ணகி கோவில் என்பது சேரன், சோழன், பாண்டியன் ஆகிய 3 மன்னர்களையும் இணைக்கும் வரலாற்றுடன் தொடர்புடையது. இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. இந்த ஒற்றுமை நீடித்து, நிலைக்க வேண்டும்.

இந்தக் கோவில் அமைந்து உள்ள நிலம் தமிழகத்திற்குச் சொந்தமானது. ஆனால், கேரள மாநில பகுதி வழியாகச் செல்வதற்குத் தான் சாலை வசதி உள்ளது. தமிழகப் பகுதியான பளியன்குடி வழியாக சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைக்க தமிழக அரசு இத்தனை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தக் கோவிலைப் பராமரித்து, பாதுகாப்பதோடு, பளியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். தமிழகத்தின் மிகப்பெரிய பெருமைமிக்க அடையாளமான கண்ணகி கோவிலைப் பாதுகாக்க வேண்டும். இந்தக் கோவிலை கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும். எனவே கோவிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பிறகு சீமான் தனது மனைவியுடன் கோயிலைச் சுற்றிப் பார்த்தார். அங்குள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டு, அதன்முன்பு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். சீமான் வந்ததைப் பார்த்த பொதுமக்கள் பலர் அவரை சந்தித்து பேசினர். இளைஞர்கள் ஆர்வத்துடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கேரள பெண் போலீசார் சிலரும் சீமானுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

Leave a Response