
அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும்,‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான திரு.கே.வெங்கட நாராயணா அவர்களை தமிழக அரசு நியமித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றிடவும், தமிழக மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்படவேண்டிய முக்கிய பொறுப்பு கொண்ட பதவிக்கு,கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டுள்ள நபரை நியமிப்பது எந்தவிதத்திலும் ஏற்புடையது ஆகாது. அதிலும்,குறிப்பாக கர்நாடக மாநில அரசு காவிரியில் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில்,அதே மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் எல்லோர் மனதிலும் எழுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திரு.கே.வெங்கட நாராயணா அவர்களின் நியமனத்தை உடனே திரும்ப பெறவேண்டும் எனவும்,தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு,தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக உறுதியோடு போராடக்கூடிய வகையில்,தகுதி வாய்ந்த, நல்ல அனுபவம் கொண்ட,தமிழ்மண்ணை சேர்ந்த ஒருவரை,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்திட வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


