
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.
இக்கோயிலில் நேர் வாயில் வழியாக சாமியை தரிசனம் செய்ய பக்தர்களிடம் கட்டாயம் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்,அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று அதிகாலை 5.45 மணியளவில் பேண்ட், டி-சர்ட், முகத்தில் கவசம் அணிந்து, ஒரு உதவியாளர் மற்றும் பாதுகாப்பு காவலதிகாரி ஆகியோருடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றார்.
அப்போது கோயில் முகப்பில் அர்ச்சகர்கள் சிலர் பக்தர்களிடம் பேரம்பேசி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றதைப் பார்த்தார்.
இதைத்தொடர்ந்து,அமைச்சரின் உதவியாளர் அங்கிருந்த கோயில் அர்ச்சகர் ஒருவரிடம் சாமி தரிசனம் செய்யவேண்டும் எனக் கேட்டுள்ளார்.4 பேர் செல்வதற்கு ரூ.4 ஆயிரம் ஆகும் என பேரம்பேசி,பணத்தை ஜிபே வழியாகப் பெற்றுள்ளார்.அமைச்சரிடம் பேரம் பேசி மாட்டிக்கொண்டதை அறிந்து, அர்ச்சகர் அங்கிருந்து நழுவியுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் ரமேஷ், அங்கிருந்தவர்களிடம் விசாரித்து விட்டு அன்னதான மண்டபத்துக்குச் சென்றார். அங்கு கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு நுழைவுச்சீட்டு கொடுக்காமல் அன்னதான மண்டபத்துக்குள் அனுமதித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அமைச்சர் அங்கிருந்த பணியாளர்களிடம் விசாரித்துள்ளார்.
இதற்கிடையே அமைச்சர் ஆய்வு செய்வதை அறிந்து,கோயில் இணைஆணையர் ராமு,உதவி ஆணையர் மெய்வேல்,உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் அங்குவந்தனர்.அங்கிருந்த கோயில் பணியாளர்களிடம் நடந்த சம்பவத்தை அப்படியே எழுதி தரும்படி அமைச்சர் கேட்டுள்ளார்.
தொடர்ந்து, அமைச்சர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அன்னதானக் கூடத்தில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர். பின்னர் கோயில் நிர்வாக அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல், கோயில் சண்முகவிலாச மண்டபம் முகப்பு, கடற்கரை,பக்தர்கள் தங்கும் விடுதி,வாகன நிறுத்தம் ஆகிய இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் நண்பகல் 12.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது….
திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும்,பக்தர்களும் என்னிடம் தெரிவித்திருந்தனர்.சமூகவலைதளங்களிலும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.அதனைத் தொடர்ந்து இரகசியமாக ஆய்வு செய்யலாம் என்ற நோக்கத்தில் அதிகாலையில் முகக்கவசம் அணிந்து வந்தேன்.
அப்போது கோபுர முகப்புப் பகுதியில் பக்தர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதைக் கண்டுபிடித்தோம்.அர்ச்சகர்கள்,அதிகாரிகள்,ஊழியர்கள் அனைவரும் சேர்ந்துதான் இந்த முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள்.அவர்கள் யாராக இருந்தாலும்,பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால்,அவர்களிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிக்கொண்டு மன்னித்து விட்டுவிட்டது போல இணையத்தில் தவறான ஒரு தகவல் பரப்பப்பட்டுள்ளது.அவர்களிடம் வாங்கியது மன்னிப்பு கடிதம் இல்லை.விளக்கக் கடிதம் தான் பெறப்பட்டுள்ளது.கோயில் சொத்துகள்,கோயிலுக்கு வரவேண்டிய வருமானங்கள் எங்கெல்லாம் தடைபட்டுள்ளது, கோயிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்,கோயில் துய்மையை எவ்வாறு கடைபிடிப்பது,கோயிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்துவிட்டுச் செல்வதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்றவை குறித்து ஆய்வு செய்துள்ளோம்.இந்த ஆய்வு அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட்டு யாராக இருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் இவ்வாறு கூறினாலும் அவருடைய செயல் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.
பக்தர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்ற புகாருக்குள்ளான கோயில் அர்ச்சகர் ஞா.ஐயப்பன் என்பவர் பூசை செய்வதற்கு மட்டும் தடை விதித்து கோயில் இணை ஆணையர் ராமு உத்தரவிட்டுள்ளார்.அதேநேரம்,முடி காணிக்கை மண்டபத்தில் பக்தர்களிடம் பணம் பெற்ற குற்றத்திற்காக பணியாளர்கள் பா.சங்கர்,வே.நாகராஜ் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதேபோல் பக்தர்களிடம் பணம் பெற்ற புகாரில் பாதுகாப்புப் பணியாளர்கள் கே.கருப்பசாமி,அ.தோப்பு ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால்,கையும், களவுமாக பிடித்து விட்டார் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ். பிடிபட்ட திருடனைத் தண்டிப்பது மட்டுமே தீர்வாக இருக்கமுடியும்.விளக்கக் கடிதம் கேட்பது என்பது அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் தயங்குகிறார் என்ற புரிதலைத்தான் தருகிறது.பணியாளர்கள் மீது உடனடி நடவடிக்கை அர்ச்சகருக்கு பூசை செய்யமட்டும் தடை என்பது பாரபட்சமானது.அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கவியலாத இந்தத் தயக்கம் அவருக்கு இந்தத்துறையை ஜாதிப் பாரபட்சமின்றி நிர்வகிக்கத் தகுதியில்லை என்ற முடிவுக்குத்தான் தமிழக மக்களைக் கொண்டு செல்லும்.
என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


