ஈரோடு மேற்கு உட்பட தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள் – அக்கட்சியினர் அதிருப்தி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏபரல் 23 அன்று நடக்கவுள்ளது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகிவருகின்றன.

திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளிலும் தொகுதிப்பங்கீடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நடைபெற்ற தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது….

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ் மாநில காங்கிரசுக் கட்சிக்கு (மூப்பனார்) ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, இராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய ஐந்து தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரசுக் கட்சி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் தமாகா, ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிடுகிறது.

இந்த ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவோம். இந்தத் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூடிப்பேசி எடுக்கப்பட்ட ஒருமித்த கருத்தாகும். தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளுக்கு இணக்கமாக தமாகா வரமுடியாத நிலையில் ‘சைக்கிள்’ சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் காரணமாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றார்.

தமிழ்நாட்டில் இந்தக் கூட்டணிக்குத் தலைமை அதிமுக என்று சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடாமல் பாஜ்கவின் சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரசு போட்டியிடுவது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு, இராசபாளையம் பொதுத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Leave a Response