நல்லகண்ணு விசயத்தில் பச்சைப் பொய் பேசிய எடப்பாடி – சான்றுடன் சாடும் மு.வீ

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக காலமானார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.அவர் அவ்வாறு செய்யத் தவறியதன் மீது பொதுமக்கள் மத்தியில் வினாவும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் “எனது தயார் 2020 இல் காலமானபோது கம்யூனிஸ்ட் கட்சியினர் யாருமே வரவில்லை. இப்போது நான் ஏன் போகணும்” எனச் சொல்லியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூத்த அரசியல் தலைவரின் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் நேரில் வருவதும் மறுப்பதும் அவர்களது விருப்பம்.தவிர்க்க முடியாத சூழல் காரணமாக வர இயலாமல் போவது கூட இயல்பானது.ஆனால்,எதிர்க்கட்சித் தலைவர் உண்மை பேசவேண்டும்.எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானபோது,அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவிக்க வேண்டும் என்ற கட்சியின் முடிவுப்படி இப்போதைய மாநில துணைச்செயலாளர் நா.பெரியசாமி,பொருளாளர் எம்.ஆறுமுகம் (முன்னாள் சமஉ) ஆகிய இருவரும், அவரது கிராமத்து வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து, எடப்பாடியாரிடம் துக்கம் விசாரித்ததை ஏன் மறுத்தும், மறைத்தும் பேசவேண்டும்?

துக்க வீட்டில் அப்போதைய மதுவிலக்குத் துறை அமைச்சர் பி.தங்கமணி, எம்.ஆறுமுகம்,நா.பெரியசாமி ஆகியோரை அறிமுகம் செய்தபோது “ஆறுமுகத்தை எனக்கு நல்லா தெரியும்” எனக் கூறியது மறந்து போனதா? இந்த நிகழ்வின்போது வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த,கட்சியின் அப்போதைய மாநில செயலாளர் முத்தரசன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஏழுமலை ஆகிய இருவரும் “முதலமைச்சர்” எடப்பாடி கே.பழனிச்சாமியின் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அரசு இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து, அவரது தாயாரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி வந்தது அனைவரும் அறிந்த செய்தியாகும்.

எது எப்படியோ? அதிமுக நிறுவப்பட்ட காலத்தில் எம்ஜிஆருக்குப் பக்கபலமாக இருந்து உதவி, தலைவர்களுடன் இணைந்து நின்றவர் நல்லகண்ணு என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உண்மை பேசுங்கள். எதிர்க்கட்சித் தலைவரே, உண்மையை மட்டும் பேசுங்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாடியுள்ளார்.

Leave a Response