
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்தமாதம் முதல்வாரத்திலோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ளது
நடைபெற உள்ள 17 ஆவது சட்டசபைத் தேர்தலில், ஆளுங்கட்சியான திமுக தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் மற்றொரு அணி,
தனித்துக் களம் காணும் நாம் தமிழர் கட்சி,
நடிகர் விஜய்யின் தவெக தலைமையில் இன்னொரு அணி என 4 முனைப்போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவும் ஈடுபட்டுள்ளனர். கூட்டணி அமைப்பதில் எடப்பாடி பழனிசாமி தாமதம் காட்ட தொடங்கியதால், அமித்ஷாவே நேரடியாக களம் இறங்கினார். அவர் பாமக தலைவர் அன்புமணி, அமமுக தலைவர் டிடிவி. தினகரன் ஆகியோருடன் பேசி கூட்டணிக்கு அழைத்து வந்தார். தேமுதிக மற்றும் பாமகவின் ராமதாஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.அதே நேரத்தில் தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருத்து கேட்கப்பட்டது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் வகையில் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பெட்டியில் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை எழுதி அதில் போட்டனர்.
அதில், அனைத்து மாவட்டச்செயலாளர்களின் விருப்பம் என்பது திமுக கூட்டணிக்குச் செல்லவேண்டும் என்பதாகதான் இருந்தது.வேறு எந்த கூட்டணிக்கும் செல்ல வேண்டாம் என்றும் கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.தோற்கும் கூட்டணியில் இணைந்து எதற்காக பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக கூறி கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கழுத்தை அறுத்து விட்டார்.இப்போது ஏன் நாம் அவர்கள் கூட்டணிக்கு செல்லவேண்டும்.அன்புமணிக்காக சீட் கொடுத்தவர்கள், நமக்கு ஏன் கொடுக்கவில்லை. இதனால் கூட்டணி வேண்டாம் என்று கூறி வந்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தேமுதிக தலைவர்களிடம் கூட்டணிக்கு வரும்படி வலியுறுத்தி வந்தனர்.
இதனால், திமுக கூட்டணியில் இணைய தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து,நேற்று காலை 11 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சென்றார்.அவருடன் பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, துணை பொதுச்செயலாளர்கள் சந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் சென்றனர். அவர்களை வாசலுக்கே வந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் வரவேற்று அவர்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை துணை பொதுச்செயலாளர் கனிமொழி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, பிரேமலதா திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது பிரேமலதா சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து பிரேமலதா அளித்த பேட்டி,….
தேமுதிக யாரோட கூட்டணி அமைக்கப் போறீங்க அமைக்கப் போறீங்கன்னு பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருந்தீங்க.
அதற்கான விடை இன்றைக்கு அறிவிச்சாச்சு. தேசிய முற்போக்கு திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இன்றிலிருந்து நம்ம வந்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம் என்றார்.
தேமுதிகவுக்கு 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க திமுக சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது தேமுதிக.
2011க்குப் பிறகு நடந்த தேர்தல்களில் தேமுதிகவால் ஒரு சமஉ அல்லது பாமஉ கூட வெல்ல முடியவில்லை.
கட்சியின் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியே சிறந்தது என தேமுதிக முடிவெடுத்துள்ளது.
இது தேய்ந்து கொண்டிருக்கும் அக்கட்சிக்கு உயிர் கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


