மே 3 ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாது – முதல்வர் பேச்சில் தகவல்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆய்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்வது பற்றியும், பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்கிறார்கள்.

பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியின் போது கூறியதாவது…..

கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது 2-வது நிலையில்தான் இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதன்கிழமை (நேற்று முன்தினம்) 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இன்று (அதாவது நேற்று) அது 25 ஆக குறைந்து இருக்கிறது. இன்னும் 2, 3 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறையும். அந்த வகையில், அடுத்த 3, 4 நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக வரும். வர வேண்டும். அதைத்தான் அரசு விரும்புகிறது.

என்றார்.

அதோடு,மே 3 ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்துவது குறித்தும் ஆராய நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கும்

என்று கூறினார்.

இதிலிருந்து மே 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாது என்பதும் படிப்படியாகத்தான் விலக்கப்படும் என்பதும் தெளிவாகிறது.

Leave a Response