
சிக்கன் குனியாவுக்கு நிலவேம்பு தந்ததுபோல் கொரோனாவுக்கு சித்த மருந்து தேடுங்கள் என்று
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….
கொரோனா என்ற உயிர்க்கொல்லி நச்சுயிரிக் கொள்ளை நோய், உலக நாடுகளில் எல்லாம் பரவி மனிதர்களைக் கொன்று வருகிறது. இத்தொற்று நோய்க்கு இதுவரை அலோபதியில் மருந்தில்லை.
நோய் எதிர்ப்பாற்றலை ஊக்கப்படுத்துவதற்காக மலேரியாக் காய்ச்சலுக்கு ஏற்கெனவே கொடுக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோக்யூன், அசிட்ரோமைசின் மருந்துகளைக் கொடுக்குமாறு இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐ.சி.எம்.ஆர்.) பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இம்மருந்துகளைக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.
செர்மனி, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமிருந்தும் அந்நாடுகளிலும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தமிழ்நாடு அரசு, இந்திய அரசு ஆய்வையும், உலக நாடுகளின் ஆயு்வையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல் சொந்தமாக ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும்.
சிக்கன் குனியா காய்ச்சல் பல நாடுகளையும் இந்தியாவையும் தாக்கிய போது, எல்லாரும் மருந்திலை என்று கைவிரித்தார்கள். அப்போது சித்த மருத்துவர்கள் கூறிய நிலவேம்புக் கசாயத்தையும், பப்பாளி இலைச் சாறையும் அரசு மருத்துவமனைகளில் தாராளமாகக் கிடைக்கச் செய்து சிக்கன் குனியாவைத் தடுத்தார் அப்போதைய முதலமைச்சர் செயலலிதா அவர்கள்.
இப்போதும், தகுதியான சித்த மருத்துவர்களின் ஆய்வுக் கருத்துகளைக் கேட்டு கொரோனாத் தொற்று நோய்க்கு முன் தடுப்பு மருந்தும், நோய் தீர்க்கும் மருந்தும் தமிழ்நாடு அரசு வழங்கலாம்.
அலோபதி மருத்துவர்களைப் புறக்கணிக்க வேண்டியதில்லை. பேரழிவு நோய் வாசலைக் கடந்து வந்துவிட்ட நிலையில், அது மூன்றாம் கட்டத்தைத் தாண்டி, நான்காம் கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற நிலையில், அலோபதி மருத்துவத்தை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டியதில்லை. சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த, போர்க்கால அவசரத்துடன் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வுண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கொடிய உயிர்க்கொல்லி தொற்று நோயிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டுக்குள் முடங்கி இருந்து, அரசின் ஏற்பாடுகளுக்கும், சட்ட விதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவது அனைவரின் கட்டாயக் கடமையாகும்.
அதேவேளை, தடையை மீறி இரு சக்கர வண்டிகளில், மகிழுந்துகளில் போவோரையும், கடைகளுக்கு வருவோரையும் காவல்துறையினர் தடியால் அடிப்பதும், அதைப் படம் பிடித்துத் தொலைக்காட்சிகளில் காட்டுவதும் சகிக்க முடியவில்லை. தடையை மீறுவோரை அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பலாம்; அபராதம் விதிக்கலாம். தடியடி நடத்த வேண்டாம் என்று காவல் துறையினர்க்குத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


