
தமிழகத்தில் சம்ஸ்கிருதத்தை திணித்தால் திமுக போராட்டம் நடத்தத் தயங்காது என்று, அதன் தலைவர் கருணாநிதி கூறினார்.
பேராசிரியர்கள் அ.ர.சனகன், ந.க.மங்களமுருகேசன் ஆகியோர் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் குறித்து எழுதிய இனமானப் பேராசிரியர் “வாழ்வும் – தொண்டும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நூலை கருணாநிதி வெளியிட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இந்த நூலை கருணாநிதி வெளியிட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
விழாவில் கருணாநிதி பேசியது:
அன்பழகனுக்கும் எனக்கும் 70 ஆண்டு கால நட்பு. இந்த நட்பு, திமுகவை வளர்க்க உறுதுணையாக இருந்துள்ளது. ஒற்றுமையாக இருந்து நாங்கள் பெற்ற வெற்றிகள் ஏராளம். எங்கள் ஒற்றுமையைக் கண்டு வயிற்றெரிச்சல் படுபவர்கள் வேறு இயக்கங்களில் உள்ளார்கள். திராவிடத்தை கேலி பேசும் இளைஞர்கள் இன்று இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். அப்படிப் பேசும் இளைஞர்கள் திராவிடத்தால் வளர்ந்த இளைஞர்கள் என்பதையும் அறிவேன்.
இந்தச் சூழலில்தான், திராவிட நாடு கோரிக்கையை திமுக கைவிட்டது ஏன் என்று அந்த இளைஞர்கள் நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டோம் என்பது கல்லில் செதுக்கப்பட்ட ஒன்று இல்லை. தேவைப்பட்டால், அதை அழிக்கவும் தயங்கமாட்டோம்.
தற்போது, ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் திணிக்கப்படும் சூழல் உள்ளது. சம்ஸ்கிருதத்தை முதன்மை மொழியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தும் சூழல் ஏற்பட்டால், அதை எதிர்த்துப் போராடவும் தயங்க மாட்டோம் என்றார் கருணாநிதி.
க.அன்பழகன், ஓய்வுபெற்ற நீதிபதி பு.ரா. கோகுலகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், மருத்துவர் சொக்கலிங்கம் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.


