கால்பந்து – பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் வரிசையில் சேர்ந்த ஜெர்மனி

ரஷ்யாவின் கஸான் மைதானத்தில் ஜூன் 27 அன்று எஃப் பிரிவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, தென் கொரியாவை எதிர்த்து விளையாடியது.

முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதியிலும் 90 நிமிடங்கள் வரை இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படாத நிலையில் காயங்களுக்கு இழப்பீடாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 3-வது நிமிடத்தில் தென் கொரியா வீரர் கிம் கோல் அடித்தார். ஆனால் இது முதலில் ஆப் சைடு என அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் விஏஆர் தொழில்நுட்ப உதவி நாடப்பட்டது. இதில் கிம் அடித்த கோல் ஆப் சைடு இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஜெர்மனி அணிக்கு அடுத்த 3-வது நிமிடத்தில் தென் கொரியா அடித்த 2-வது கோல் பேரிடியாக அமைந்தது. இந்த கோலை ஹெங்குமின் அடித்திருந்தார். முடிவில் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஏற்கெனவே இரு ஆட்டங்களில் தோல்வியடைந்திருந்த தென் கொரியா அணிக்கு இந்த வெற்றி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற உதவவில்லை. ஆனால் அதேவேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஜெர்மனி உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.

உலகக் கோப்பை வரலாற்றில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய பிரான்ஸ் 2002-ம் ஆண்டிலும், இத்தாலி 2010-ம் ஆண்டிலும், ஸ்பெயின் 2014-ம் ஆண்டிலும் லீக் சுற்றுடன் வெளியேறியிருந்தது. இந்த வரிசையில் தற்போது ஜெர்மனியும் இணைந்துள்ளது.

இந்த வெற்றி தென்கொரியாவுக்கு எவ்விதப் பலனையும் தரவில்லை என்றாலும் நடப்பு சாம்பியனை வெளியேற்றிய பெருமையைக் கொடுத்துள்ளது.

Leave a Response