
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த நாள்
19.10.1888
சல்லிக்கட்டுப் போராட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் உச்சரித்த ஒரே மந்திரச்சொல்
“தமிழனென்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!”
தமிழர் இன உணர்வை கம்பீரமாக வெளிப்படுத்தும் இந்தப்பாடலை இயற்றியவர் வெ.இராமலிங்கனார்.
இந்தப்பாடல் 1960ஆம் ஆண்டு வெளிவந்த “கடவுளின் குழந்தை” திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.
வெ.இராமலிங்கனாரின் நெருங்கிய நண்பரும்,. ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் பணியாற்றியவருமான சின்ன அண்ணாமலை என்பவர் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தில் வரும்
” தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்ந்து நில்லடா!
பாடலும்,
“இளந்தமிழா! உன்னைக் காண
இன்பம் பெருகுது!
இதுவரைக்கும் எனக்கிருந்த
துன்பம் குறையுது”
பாடலும் ,
அன்றைய தமிழின உணர்வாளர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
அதே போல், இவர் எழுதி 1954இல் திரைப்படமாக வெளிவந்த மலைக்கள்ளன் படத்திலும் இவரின் பாடல் பயன்படுத்தப்பட்டது. அப்படத்தில்வரும்,
“தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு”
என்ற தொடக்கப் பாடல் தமிழின உணர்வுக்கு உரமூட்டியது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் கவிதைகள் பெரும் வீச்சைப் பெற்றது. அவரின் மறைவுக்குப் பிறகு அதே வீச்சு குறையாமல் பாடல்களைத் தந்தவர் என்று பாராட்டுப் பெற்றவர் இராமலிங்கனார்.
உப்பு சத்தியாக்கிரகம் போரில் வழிநடைப் பயணப் பாடலாக இவர் எழுதிய
“கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
பாடல் அன்றைய காங்கிரசுத் தொண்டர்களால் பெரிதும் உச்சரிக்கப்பட்டது.
இவர் கவிஞர் மட்டுமல்ல, சிறந்த ஓவியருமாவார். அவர் எழுதிய தன்வரலாற்று நூலான “என் கதை” நூல் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூலாகும். மேலும், காப்பியங்கள் 5, கவிதை தொகுப்புகள்15, கட்டுரை நூல்கள் 15, இலக்கிய நூல்கள் 14, வாழ்க்கை வரலாறுகள் 7, இசை ஆய்வு நூல்கள் 4, மொழி பெயர்ப்பு நூல்கள் 3, நாடகங்கள் 2 , திருக்குறள் உரை 1 என்று மொத்தம் 66 நூல்களை எழுதி உள்ளார்.
திராவிடக் கருத்தியலால் தமிழ்ச்சமூகம் பீடிக்கப்பட்டிருந்த வேளையில், அவற்றுக்கு எதிராக தமிழின அடையாளத்தை முன்னுறுத்திப் பாடிய பெருமை இராமலிங்கனாரையே சேரும்.
அவர் வாழ்நாளில் செய்த தவறு காங்கிரசு கட்சியில் இருந்தது தான். எந்த காங்கிரசுக்காரனும் அவரைக் கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை. நாமக்கல்லில் அவர் வாழ்ந்த வீடு சில புகைப்படங்களோடு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கின்றன. நாமக்கல்லில் அவருக்கு சிலை கூட கிடையாது. வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் நேரு முதல் அவரது பேரன் ராஜீவ் வரைக்கும் மூலை முடுக்கெல்லாம் சிலை உள்ளது. இன்னும் கொள்ளுப்பேரன் ராகுலுக்கு சிலை வைக்க வேண்டியது தான் பாக்கி.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அரசு அலுவலகக் கட்டடத்திற்கு “நாமக்கல் கவிஞர் மாளிகை” என்று கருணாநிதியால் பெயர் சூட்டப்பட்டது தான் சற்று ஆறுதலான விசயம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை தமிழராக அடையாளப் படுத்திப் போராடிய இராமலிங்கனார் இன்று உயிரோடிருந்தால் சோனியாவிற்கு எடுபிடிகளாக மாறிப் போன காங்கிரசு கயவாளிகளைப் பார்த்து,
“தமிழனென்று சொல்லாதே! இழிவைத் தேடிக் கொள்ளாதே!”
-என்று தான் பாடியிருப்பார்!


