
தமிழீழ இசைக்கல்லூரியின் பொறுப்பாளராக விடுதலைப்புலிகள் நிர்வாகத்தில் இருந்தவரும் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளராகவும் இருக்கும் கண்ணதாசனுக்கு வவுனியா மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.
போரின் போது விடுதலைப்புலிகளுக்கு கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே போரின் பின் கைது செய்யப்பட்டு போர்க்கைதி தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டவர்.
போர்க்கைதி விடுதலையிலும் அதன் பின்னும் இக் கைதிகள் கையாளப்படக்கூடிய அரசியல் பற்றி விடமேறிய கனவு நாவல் முன்னரே பேசியிருந்தது. அதன் இன்னொரு நிரூபணமாக இப்போது இச்சம்பவம் நிகழ்ந்திருகிறது. இது முற்றிலும் தமிழ் அரசியலை மொண்ணை ஆக்குவதற்கான நிகழ்ச்சி நிரல் என்பது மக்கள் அறிவாக மாற்றப் படவேண்டும்.
ஒரு இன அழிப்பில் ஈடுபட்டவர்கள் அதற்கான விசாரணையைக் கூட ஏற்க மறுக்கும் சூழலில் விடுதலைப்புலிகளின் செயல் பாடுகளில் சம்பந்தப்பட்டவர்களை குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து நீதி வழங்குகிறோம் என்றால் அது நீதியா? அரசியலா? என்பதைப் பகுத்துணர வேண்டும்.
ஒரு உள் நாட்டுப் போர் விவகாரமாக இதைக் காணாமல் குற்றவியல் சட்டத்தின் கீழ் இதனை அணுகுவதன் மூலம் மொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் அச்சுறுத்தல் விடுக்கிறது இந்த அரசு.
முப்பது வருட ஆயுதப் போரில் புலிகளோடு சம்பந்தப்படுத்தி வடக்கு, கிழக்கில் வாழும் அநேகமான மக்கள் மீது இவ்வாறு வழக்கு தொடுக்க முடியும். பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்ற ஒற்றைச்சொல் அதற்குப் போதுமானதாக இருக்கும். அரச உயர் அதிகாரிகளில் இருந்து வர்த்தகர்கள் சாதாரண பொதுமக்கள் ஈறாக இவ்வாறு குற்றம் சாட்டப்பட முடியும். தண்டனையும் அளிக்கப்பட முடியும்.
ஆக, இது மொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் விடுக்கப்படும் மிரட்டல். தமிழ் அரசியல், சமூக செயற்ப்பாட்டாளர்களை முடக்கி தமிழ் அரசியலை அடக்குவதே இதன் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்.
ஆயின் இத்தீர்ப்பு தனிமனிதன் சார்ந்ததல்ல தமிழ் மக்கள் சமூகத்தைச் சார்ந்தது. இதனை எதிர்கொள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும், சட்டவல்லுனர்களும் தயாராகாது விட்டால் எதிர்கால விளைவு விபரீதமாக இருக்கும். அரசியல் தலைமைகள் இது விடயத்தில் அசட்டை செய்தால் இந்த நிகழ்ச்சி நிரலின் பின்னால் அவர்களும் உள்ளார்கள் என்றே அர்த்தம். கூரை கொழுத்த கொள்ளி எடுத்துக் கொடுகிறார்கள் என்றே அர்த்தம்.
– நஞ்சுண்டகாடு குணா கவியழகன்


