சுவிட்சர்லாந்தைக் கலக்கும் ஈழத் தமிழ்ப்பெண்

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறிய ஈழத்தமிழ்ப் பெற்றோருக்கு பிறந்த தமிழ்ப் பெண் தாமாவகீசன், சுவிஸ், தமிழீழம் ஆகிய இரு நாடுகளின் கலாச்சாரங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஈழத்தைச் சேர்ந்த பெற்றோர் இருவர் சுவிஸில் குடியேறி புகலிடம் பெற்றுள்ளனர்.

பேர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal நகரில் குடியேறிய இவர்களுக்கு கடந்த 1988-ம் ஆண்டு Tama Vakeesan என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. சுவிஸில் வங்கி ஒன்றில் பணிபுரியும் இவருக்கு தற்போது வயது 28.

சுவிஸில் பிறந்திருந்தாலும் தமிழ்க் கலாச்சாரத்தை மறக்காத இவர் அதன் பெருமைகளை வீடியோவாக வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஈழம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

‘இரண்டு நாடுகளின் கலாச்சாரங்களை அறிந்துள்ளதால் என்னிடம் தன்னம்பிக்கை அதிகமாகவே உள்ளது. தமிழர்கள் மற்றும் சுவிஸ் குடிமக்களைப் பற்றி விரிவாகவே அனைவரிடம் பேசிவருகிறேன்.

சில நேரங்களில் நான் எந்த நாட்டிற்குச் சொந்தமானவர் என்ற சந்தேகம் அடிக்கடி எழுந்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

என்னால் தமிழ், சுவிஸ், ஜேர்மன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைச் சரளமாகப் பேச முடியும். இப்படிப் பேசுவதால் இங்குள்ள சுவிஸ் குடிமக்கள் என்னை வியப்பாகப் பார்க்கின்றனர்.

சுவிஸ் குடிமக்கள் அன்பானவர்கள். ஆனால், தமிழர்களைப் போல் எளிதில் நட்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாது.சுவிஸில் உள்ள தமிழர்கள் வீட்டிற்கு எந்த நேரத்திலும் செல்லலாம். வீட்டில் அமர்ந்து உணவு அருந்தலாம்.

ஆனால், சுவிஸ் குடிமகன் வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு ‘இன்றைக்கு வீட்டிற்கு வரலாமா?’ என அனுமதி வாங்கிய பிறகு தான் செல்ல முடியும்.

இரண்டு நாடுகளின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி சுவிஸ் மற்றும் ஜேர்மன் மொழிகளில் சரளமாகப் பேசுவதால் எனக்கு சுவிஸில் எண்ணற்ற நண்பர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்த அனுபவங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருவதால் அனைவருக்கும் என்னை நன்றாகத் தெரிந்துள்ளது பெருமையாக உள்ளது.

ஆனால், ‘28 வயதான உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் நடைபெறவில்லை’ என பலர் கேள்வி எழுப்புவது தான் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

’சாதிக்க எண்ணற்ற விடயங்கள் இருக்கும்போது திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்?’ எனக் கேட்கிறார் தாமாவகீசன்.

Leave a Response