இப்போதும் ஒன்றுபடாவிட்டால் வரலாறு மன்னிக்காது – தமிழகக் கட்சிகள் மீது வீரமணி கோபம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக விவசாயிகளின் அவல நிலை – நீட் தேர்வு, முழு மதுவிலக்கு இவற்றை மய்யப்படுத்தி, தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முக்கியத்துவத்தை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள நீண்ட அறிக்கையின் ஒரு பகுதியில்,

காவிரி நதிநீர்ப் பிரச்சினை, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் பிரச்சினை, சமூகநீதியைப் பாதிக்கும் மத்திய அரசின் நீட் தேர்வு, மது விலக்கு உள்ளிட்ட பிரச்சினைகளை மய்யப்படுத்தி – தி.மு.க. சார்பில் அதன் செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை (16.4.2017) கூட்டியது காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட தேவையான நடவடிக்கையாகும்.

இரங்கல் தீர்மானம் உள்பட 19 அரிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவற்றினை வலியுறுத்தி மத்திய – மாநில அரசுகளைச் செயல்பட வைக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவது என்கிற தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்,

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை சென்னையில் வரும் 22 ஆம் தேதி நடத்துவது என்றும் தீரமானிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டமும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் என்றென்றும் பேசப்படக் கூடியவைகளாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

காவிரி நதி நீர்ப் பிரச்சினையைப் பொறுத்தவரை நம் பக்கம் நியாயமும், சட்டமும், நியதிகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் இருந்தாலும் நாம் ‘தோல்விகளைச்‘ சுமந்துகொண்டே இருக்கிறோம்.

அதேநேரத்தில் நீதி, நியாயம், நியதி, சட்டம், தீர்ப்புகள் இவற்றிற்கு நேர்மாறாக கருநாடகம் நடந்துகொண்டாலும், அவர்களின் காட்டில்தான் மழை பொழிந்து கொண்டுள்ளது.

இந்த நிலைக்கு மிக முக்கிய காரணம், அம்மாநிலத்தின் கட்சிகள், மதங்கள், ஜாதிகள் இவற்றைத் தாண்டி இன்னும் சொல்லப்போனால், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என்ற வேறுபாடின்றி அடாவடித்தனத்துக்காக ஒரே அணியாய் ஆவேசக் குரல் கொடுத்து ஒன்று திரண்டு நிற்கின்றனர்.

இவ்வளவுப் பாதிப்புக்கு ஆளாகியும் இன்னும் குதர்க்கம் பேசும் நிலைகளும் இங்கு உள்ளனவே! அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் இன்னும் இருப்பது சரியானதுதானா?

நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்தத் தருணத்தில்கூட ஒன்றுபட்டு நிற்க முன்வராவிட்டால், வரலாறு அவர்களை மன்னிக்கவே மன்னிக்காது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response