இரட்டைஇலை முடக்கம் ஒரு அரசியல் பலாத்காரம் – பாஜகவைச் சாடும் எழுத்தாளர்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் இரட்டைஇலை சின்னம் முடக்கப்பட்டிருப்பது மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகார துஷ்பிரயோகமே என்கிற கருத்து எல்லோருக்கும் இருக்கிறது. அதற்கு வலுச் சேர்க்கும் விதமாக எழுத்தாளர் லட்சுமி மணிவண்ணனின் பதிவு அமைந்திருக்கிறது. அதில்…

இரட்டை இலையை முடக்குவதற்கு ஆளும் மத்திய பி.ஜெ.பி அரசு முயற்சிக்கிறது,உட்கட்சி பிளவுகளில் அது அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறது என்பது போன்ற மக்களின் சந்தேகங்கள் உண்மையாகியிருக்கின்றன.

தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு ? என்ற மக்கள் சந்தேகங்களை நோக்கி பி.ஜெ.பியினரும் கேள்வி கேட்டார்கள்.ஆனால் சந்தேகம் சரிதான் என்பது இப்போது வெளிப்படுகிறது.

ஆளும் அரசின் தாக்கம் இன்றி முடிவுகளை எடுக்கும் தனித்த அமைப்புகள் என்று இந்தியாவில் தற்போது எந்த அமைப்பும் கிடையாது.நீதித்துறை,தேர்தல் கமிஷன் உட்பட .இன்னும் அரசாங்க தலையீடுகள் அற்ற அமைப்புகள் இந்தியாவில் உள்ளன என்று ஒருவர் கருதிக் கொண்டிருப்பாரேயானால் அவர் நிச்சயமாக கற்காலத்தைச் சேர்ந்தவராகத் தான் இருக்க முடியும்.அரசின் நேரடியான ,மறைமுகமான தாக்கங்கள் அனைத்தையுமே தலையீடாகவே கருத வேண்டும்.

ஜெயலலிதா காலமான பின்னர் பி.ஜெ.பி தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிற அரசியல் சதிகள் “எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம் “என்கிற மனோபாவத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன.

பி.ஜெ.பியின் இந்த அரசியல் பலாத்காரம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எடப்பாடி அணியின் அ.தி.மு.கவினர் அமோக வெற்றியை மக்களிடமிருந்து வென்றெடுப்பது ஒன்றே வழி.

எதிரிக்கு எது நடந்தாலும் பரவாயில்லை தங்கள் அரசியல் லாபம் மட்டுமே பிரதானம் எனக் கருதும் தி,மு.கவினரின் குதம் சரியவும் தற்போது வேறு வழிகள் இல்லை.மக்கள் பல்வேறு மாய குழப்பங்களை எதிர் கொள்ளும் வகையில் நோக்கங்கள் கருதிய பல தரப்பினரும் சுழன்றடித்து வருகிற சூழ்நிலையில் ; மக்கள் இந்த குழப்பங்களை விஞ்சத் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தற்போதைய தமிழ்நாடு அரசு தனது பதவிக் காலத்தை முழுமை செய்யவும் ,அதற்கு இடையூறான பலாத்காரங்களும் சதி வேலைகளும் முடிவுக்கு வருவதும் இப்போது மக்களின் கைகளிலேயே இருக்கிறது.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் தொடங்கி பி.ஜெ.பி தமிழ்நாட்டில் தொடர்ந்து வருகிற அரசியல் அராஜகமும் ,சதிவேலைகளும் தமிழ்நாட்டில் பலிக்குமேயானால் அவர்கள் அ.தி.மு.கவுடன் தங்கள் பலாத்காரப் பணியை நிறுத்தமாட்டார்கள். பின்னர் தி.மு.கவில் தொடர்வார்கள் என்கிற நினைவு தி.மு.கவிற்கு துளியும் இருப்பது போன்று தெரியவில்லை.தற்காலிக லாபத்தில் குளிர்காயலாம் என்று அவர்கள் கருதுவது முட்டாள்தனமானது.மட்டுமல்ல தி.மு.கவை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகிற முட்டாள்தனம் இது.

சசிகலா கைதானதை ஒட்டி பி.ஜெ.பியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அ.தி.மு.க தமிழகத்தில் அழிந்து விட்டது,தி.மு.க அழிந்து கொண்டிருக்கிறது ,மாற்றை மக்கள் விரும்புகிறார்கள் என்று பேசியதை இந்த சமயத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் சகல பிரிவு மக்களும் ஏற்கும் விதமான ஒரு தலைமையைக்கூட இன்னும் எட்ட இயலாத பி.ஜெ.பியினரிடமிருந்து அரசியல் ஆலோசனைகள் பெற வேண்டிய நிலைக்கு தமிழ்நாட்டு மக்கள் கீழிறங்கக் கூடாது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பி.ஜெ.பி இப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.

அ.தி.மு.க அழித்தாலும் சரி ,தி,மு.க அழித்தாலும் சரி எனக்கு அதனால் எத்தகைய பக்கவாதமும் ஏற்படப் போவதில்லை.ஆனால் எதுவாக இருப்பினும் அது சதி வேலைகளை அரங்கேற்றி நடைபெறக் கூடாது என்பது மட்டுமே என்னுடைய கவலை.இந்த இரு கட்சிகளும் காலத்தில் தேக்கமடைந்து விட்டன,தமிழ் நாட்டில் அரசியல் வெறுமை ஏற்பட்டிருக்கிறது என்பதெல்லாம் உண்மைதான்.தமிழ்நாடு நாற்பது வருடங்களுக்கு முன்னர் இருந்தது போன்ற ஒரு அரசியல் சூழ்நிலையில் மாற்றத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பிரவேசித்திருக்கிறது என்பதும் உண்மை.

கேரளாவில் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட்கள் என மாறி மாறியிருந்தாலும் கூட அவர்கள் சாதியத்தின் பழைய உடும்புப் பிடியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை.கேரளா காங்கிரஸ் செரியன் கட்டுப்பாட்டில் உள்ள கட்சி எனில் கம்யூயுனிஸ்டுகள் நாயர்கள் ,ஈழவர்கள் என மாற்றி மாற்றி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள்.இந்த நிலை என்பது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்த போதுள்ள நிலையை ஒத்தது.

தமிழ்நாடு அந்த நிலையிலிருந்து வெகுதூரம் விலகி வந்திருக்கிறது.முற்றிலுமாக என்று சொல்லாயிலாமற் போனாலும் கூட ,சகல குறைபாடுகளுடன் கூட சகல சாதியினருக்கும் பிரதிநித்துவத்தைக் கடைபிடிக்கும் கட்சிகள் என்று அ.தி.மு.க ,தி.மு.க என்ற இரண்டு கட்சிகளையுமே சொல்ல முடியும்.இவர்கள் பழகிய பேய்கள்.சாதகமான பேய்கள்.புதிய தெய்வங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டிற்கு இந்த பழைய பூதங்களே தற்போது போதுமானவை.இப்போது தெய்வத்தின் தரப்புகளாக இங்கே முன்னுறுத்தப்படுகிறவை தெய்வங்களின் தரப்புகள் அல்ல.தெய்வத்தின் அழுகிய முகமூடிகளின் சார்பானவை.

இந்தியாவில் இப்போது அரசும் ,அரசு எந்திரமும் முன் எப்போதும் கண்டிராத வகையில் பொய்மையின் கைகளில் அடைக்கலம் ஆகியிருக்கிறது.மாநில அரசுகளுக்கும் இந்த கூற்றுக்குப் பொருத்தமானதே .இதனை உண்மையின் பக்கமாக திருப்புவது என்பது, பணி தொடங்கப்பட்ட பின்னர் நூறு ஆண்டுகளைக் குறைந்த பட்சம் கேட்கும் காரியங்கள்.

அந்த கற்பனையின் ஆசையின் காரணமாக பலாத்காரத்தில் ,சதிகளின் பக்கமாக ,ஜனநாயகத்திற்கு எதிரான திசைகளில் மக்கள் மனம் திரும்பக் கூடாது.

இரட்டைஇலை சின்னம் என்பது மக்கள் சக்தியின் மனோபாவத்தை குறிப்பிடுகிற ஒரு வடிவம்.இதனை ஆளும் பி.ஜெ.பி.அரசு கண்டு அஞ்சுகிறது.இரட்டைஇலை பாசிட்டிவான ஒரு பி.ஜெ.பி மனோபாவம் கொண்ட மக்கள் திரளையும் சேர்த்து குறிக்கக் கூடியது. அ.தி.மு.க வைக் கண்டு பி.ஜெ.பி அஞ்சுவதற்கு இது முக்கியமான காரணம்.அவர்கள் தமிழ்நாட்டில் வேறு எவரையும் முக்கியமான எதிரியாகக் கருத வாய்ப்பு இல்லாமைக்கும் இதுவே காரணம். அ.தி.மு.க அழிந்ததால் தங்களுக்கு தானாகவே இடம் உருவாகிவிடும் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள்.அதனை சதிகள் மூலம் அடைய முயற்சிக்கிறார்கள்.ஆனால் எதனை முன்னிட்டு இரட்டைஇலையைக் கண்டு அஞ்சுகிறீர்களோ,அதே காரணத்தின் அடிப்படையில் மக்கள் அதனை எழுப்புவார்கள்.காத்திருந்து பாருங்கள்.இரட்டைஇலை விட்டுத் தருகிற இடம் ஒருபோதும் தாமரைக்கு சொந்தமாகாமல் இருப்பதே தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது.

இவ்வாறு அவர் எழுதியிருக்கிறார்.

Leave a Response