
மட்டக்களப்பு, கிரான் தெற்கு, வாகரை வடக்கு பிரதேச பகுதியிலுள்ள பழங்குடிகள் சிங்கள அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு தங்களின் வாழ்க்கையை அழித்துவிடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வருவதாக கிரான் பிரதேச செயலக பகுதியிலுள்ள மினுமினுத்தவழி மற்றும் அக்குராணை பகுதியில் வசிக்கிறவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பழங்குடி வைரமுத்து நடராசா கூறும்போது,
நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கும் ஆதிவாசிகளாகிய எங்களின் வாழ்க்கை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் இருக்கும் காலங்களில் மிகவும் சந்தோசமான முறையில் எங்களுக்குத் தேவையான காட்டு விலங்குகள், காட்டுத் தேன் போன்ற பல விடயங்களை சுதந்திரமாக செய்துவந்திருந்தோம்.
எனினும், தற்போது அனைத்துக்கும் சட்டம் விதிக்கின்றார்கள். இதன் காரணமாக ஆதிவாசிகளுக்குரிய பல பாரம்பரிய உணவுகளைக்கூடப் பெற்றுக் கொள்ள முடியாத அவல நிலையில் இருக்கின்றோம்.
நல்லாட்சி என்கின்ற அரசு ஆதிவாசிகள் வசிக்கும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதில் பின் நிற்பதாகவும், எவ்விதமான உதவிகளும் பெற்றுத்தரவில்லை எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.


