தமிழகத்தில் பால்விலையை ஆந்திரநிறுவனங்கள் உயர்த்துவதா? கொதிக்கும் தொழிலாளர்கள்


அனைத்து முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் மார்ச் 5ம் தேதி முதல் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்தியுள்ளன.

இதையொட்டி அரசியல் கட்சிகளுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் வெறும் 16.4% (சுமார் 25லட்சம் லிட்டர்) தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்கின்ற ஆவின் நிறுவனத்தின் “ஆவின் பால்” விற்பனை விலையை தமிழக அரசு (எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும்) உயர்த்தினால் மட்டும் தமிழகத்தில் உள்ள உதிரிக் கட்சிகள் தொடங்கி, பெரிய கட்சிகள் வரை வரிசையாக வந்து கண்டனப் போராட்டங்களையும், முற்றுகை போராட்டங்களையும் நடத்துவதோடு, கண்டன அறிக்கைகளையும் தொடர்ந்து வெளியிடுவார்கள்.

ஆனால் தமிழகத்தில் நாளொன்றுக்கு தேவையான பாலில் சுமார் 83.6% (சுமார் 1கோடியே 25லட்சம் லிட்டர்) தேவைகளை பூர்த்தி செய்கின்ற தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டு வரும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பாலுக்கான விற்பனை விலையை உயர்த்தினால் மட்டும் கண் மூடி, வாய் பொத்தி மெளனமாக இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தற்போது (06.03.2017முதல்) ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நான்கு முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 2.00ரூபாய் முதல் 5.00ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த தன்னிச்சையான பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலை உயர்வை “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” கடுமையாக எதிர்த்த சூழ்நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் இந்த விலை உயர்விற்கு தங்களின் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பதற்கு எங்களது சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்காக போராடுவதாக, குரல் கொடுப்பதாக மார்தட்டிக் கொள்ளும் அனைத்து அரசியல் கட்சிகளும் தனியார் பால் நிறுவனங்களின் பால் விற்பனை விலை உயர்வை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதற்கு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுவது உண்மை என்றால் “அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய கொள்கை ரீதியாக முடிவெடுத்து நடைபெற உள்ள தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அவசர சட்டம்” இயற்றிட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து எங்களது தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

“அனைத்து தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் மற்றும் விற்பனை செய்கின்ற பாலுக்கான விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்கின்ற வகையில் தமிழக அரசு சட்டம்” இயற்றினால் மட்டுமே சுமார் 7.5கோடி பொதுமக்களின் நலனும், பால் உற்பத்தியை, பால் வணிகத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள், தொழிலாளர்கள் என 30லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Response