
மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பஞ்சாயத்து உட்பட 1514 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 16, 21-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 இடங்கள் உள்ளன. இதில் சிவசேனா 84 இடங்களையும் பாஜக 80 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. காங்கிரஸுக்கு 31 இடங்களும் தேசியவாத காங்கிரஸுக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன.
மும்பை மாநகராட்சி தேர்தலில் சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தமிழர்கள் பலருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது இவர்களில் 2 பேர் வெற்றி வாகை சூடி மும்பை மாநகராட்சிக்கு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தாராவியில் உள்ள 187–வது வார்டில் சிவசேனா வேட்பாளராக மாரியம்மாள் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இவர் தாராவி தாலுகா சிவசேனா தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கத்தின் மனைவி ஆவார். மாரியம்மாள் 6 ஆயிரத்து 846 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவுடன் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாரியம்மாளை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சகிலா காதர் சேக் 6 ஆயிரத்து 95 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
இதேபோல சயான் கோலிவாடா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 176–வது வார்டில் தமிழ் வேட்பாளர்கள் ரவிராஜா(காங்கிரஸ்), கராத்தே முருகன்(பா.ஜனதா), எஸ்.ஏ.சுந்தர்(அ.தி.மு.க.) உள்பட மொத்தம் 17 பேர் போட்டியிட்டனர். இதில், காங்கிரஸ் வேட்பாளர் ரவிராஜா 3 ஆயிரத்து 814 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகும்.
பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வின் சகோதரர் கராத்தே முருகன் 3 ஆயிரத்து 495 வாக்குகள் பெற்றிருந்தார். அவருக்கு 3–வது இடமே கிடைத்தது. அ.தி.மு.க. சார்பில் களமிறக்கப்பட்டு இருந்த வேட்பாளர் எஸ்.ஏ.சுந்தருக்கு 360 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதேபோல மற்ற வேட்பாளர்களும் சொற்ப எண்ணிக்கையிலான வாக்குகளையே பெற்றிருந்தனர்.


