சி 3 – திரைப்பட விமர்சனம்

முதல்பாகத்தில் குழந்தைகள் கடத்தல், இரண்டாம் பாகத்தில் போதை மருந்து கடத்தல் ஆகியனவற்றைக் கண்டுபிடித்த சூர்யாவுக்கு இந்தப் படத்தில் இன்னும் கூடுதல் வேலை.

உலகின் குப்பைத்தொட்டியாக இந்தியா இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி அதைத் தட்டிக்கேட்டுத் தடுக்கிற வேலை சூர்யாவுக்கு.

அதைத் தமிழ்நாட்டிலிருந்தே செய்திருக்கலாம். ஆனால் எதற்காகவோ படத்தின் கதைக்களம் முழுக்க ஆந்திராவாகவே இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டினர் பெருமை கொள்ளத் தக்க வகையில், ஆந்திர சட்டமன்றத்திலேயே, இந்த வழக்கைக் கண்டுபிடிக்க தமிழ்நாட்டிலிருந்து துரைசிங்கம் வந்தால்தான் சரி என்று பேசுகிறார்கள்.

இதனால் தமிழனாகப் பெருமை கொள்ளலாம் என்று நினைப்பதற்குள் நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டே வில்லன்களைப் பந்தாடுகிறார் சூர்யா.

படம் முழுக்க சூர்யாவே ஆக்கிரமித்திருக்கிறார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகிய இரண்டு நாயகிகள், சூரி, ரோபோ சங்கர் ஆகிய இரண்டு நகைச்சுவை நடிகர்கள் ஆகிய எல்லோருமே வந்து போகிறவர்களாகவே இருக்கிறார்கள்.

பிரியனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.

ஹாரிஸ்ஜெயராஜின் பாடல்கள் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

அதிரடிக்காட்சிகள் மற்றும் சண்டைகளுக்கு நடுவே காதல், கண்ணீர் ஆகியனவற்றை அங்கங்கே வைத்திருக்கிறார் இயக்குநர் ஹரி.

சில வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. ஒரு தவறு செய்தால் அதைத்தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன் என்று எம்ஜிஆரின் பாடல் வரிகளையே வசனமாக வைத்திருக்கிறார்கள்.

படம் வேகமாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தை மனதில் வைத்து படத்தைத் தொகுத்திருப்பதால் எல்லா நேரமும் க்ளைமாக்ஸ் போலவே இருக்கிறது.

படத்தின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.

Leave a Response