
போயஸ்கார்டனில் 3 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அன்று நள்ளிரவே, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அவருக்கு எதிராக அமைச்சர்கள், எம்பிக்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முதல்வர் பதவி ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று பகிரங்கமாக கூற ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 29ம் தேதி நடந்தது. அதில் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் டிசம்பர் 31ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்று கொண்டார். அதன் பின்னர் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வெளிப்படையாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.
பத்திரிகைகள், டிவிகளில் அவர்களே நேரடியாக பேட்டி கொடுக்கத் தொடங்கினர். அதாவது, கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவரே ஆட்சியை வழிநடத்த வேண்டும். அதனால் சசிகலா தமிழக முதல்வராகப் பதவியேற்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசத் தொடங்கினர். சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தான் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்களே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தனர். சசிகலா முதல்வர் ஆனவுடன் அமைச்சரவையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளார். அதில் தற்போது அமைச்சர்களாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, விஜயபாஸ்கர் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் செங்கோட்டையன், தோப்பு வெங்கடாச்சலம், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது சபாநாயகராக உள்ள தனபாலுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் வேறு ஒருவரை சபாநாயகராக ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காலை 11 மணி: போயஸ்கார்டனில் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை அரை மணி நேரம் நடந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்ய முடிவு.
மதியம் 1 மணி: கட்சி தலைமை அலுவலகத்துக்கு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை
மதியம் 1.50 மணி: மூத்த அமைச்சர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கட்சி அலுவலகத்துக்கு வருகை.
மதியம் 2.10 மணி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை. மூத்த அமைச்சர்கள் வழக்கமாக அவருடன் வருவது வழக்கம். ஆனால் அவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மட்டும் வந்தார்.
மதியம் 2.10 மணி: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம். அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்வு.
மதியம் 2.40 மணி: எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது.
மதியம் 3.10 மணி: சசிகலா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வருகை.
மதியம் 3.10: சசிகலா தலைமையில் மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம். அதில் சசிகலா எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்து பேச்சு.
மதியம் 3.30 மணி: எம்எல்ஏக்கள் வெளியே வருகின்றனர். ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை. ஓ.பி.எஸ்.சிடம் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அவர் மவுனமாக அங்கிருந்து புறப்பட்டார்.
மதியம் 3.30 மணி: சசிகலா போயஸ்கார்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் அவர் வருகிற 9ம் தேதி முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை போயஸ் கார்டனில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு சசிகலாவுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 4 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
போயஸ்கார்டனில் நடந்தது என்ன?
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 60 நாட்கள், அதாவது நேற்று வரை தமிழக முதல்வராக ஓபிஎஸ் நீடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. தன்னை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்கள் மற்றும், டெல்லியில் உள்ள சில முக்கிய விஐபிக்களிடம் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் போயஸ்கார்டனில் சசிகலா நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்வது, முதல்வராக எப்போது பதவியேற்பது என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஓ.பன்னீர்செல்வம், தான் திறமையாக ஆட்சி நடத்துவதாகவும், கட்சிக்கு தற்போது நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், தான் சசிகலாவுக்கு எப்போதும் கட்டுப்பட்டு நடப்பதால், தற்போதைய அமைச்சரவையே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு அனுமதிக்காவிட்டால், தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வேண்டாம். அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவதாக தெரிவித்தார். இதனால், அவரை சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் சமாதானப்படுத்தினர். துணை முதல்வர் பதவி வழங்குவதாகவும் சமாதானம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, தனது முதல்வர் பதவி ராஜினாமா கடிதத்தை சசிகலாவிடம் ஓ.பன்னீர்செல்வம் அளித்ததாக கூறப்படுகிறது. அந்தக் கடிதம் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:
என்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக நான், என்னுடைய தமிழ்நாடு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய ராஜினாமாவை ஏற்று கொள்ளுங்கள். அதே நேரத்தில் என்னால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுவில் உள்ளவர்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று பிற்பகல் நடந்தது. இதில் 134 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். மொத்தம் அதிமுகவில் தற்போதைய நிலவரப்படி 135 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் ஒருவர் சபாநாயகராக இருப்பதால் அவரால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இதனால் 134 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இக்கூட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்தது. இதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக, சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிவடைந்ததும் சசிகலா கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். அப்போது முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுங்கியே இருந்தார். அதாவது, அமைச்சர்கள் நின்றிருந்த கூட்டத்தில் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, சசிகலா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அதில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அவர் எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். அதைத் தொடர்ந்து சசிகலா கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள மாடியின் பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து போயஸ்கார்டனுக்கு புறப்பட்டு சென்றார். அவரை தம்பித்துரை, செங்கோட்டையன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், “அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான ஆதரவு கடிதத்தை கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஓ.பன்னீர் செல்வத்தின் ராஜினாமா கடிதமும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் சசிகலாவுக்கு அழைப்பு விடுப்பார். அதன் பேரில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறும். அதாவது பதவியேற்பு விழா 7ம் தேதி(நாளை) அல்லது 9ம் தேதியில் ஏதாவது ஒரு நாளில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் இருக்குமாறு கண்டிப்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9ம் தேதி தைப்பூசம் என்பதால் அன்றைய தினத்தில் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடத்தலாமா? அல்லது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடத்துவதா? என்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மறைந்தபோது மிகவும் எளிமையாக அமைச்சரவை பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. அதே போல இந்த முறையும் அங்கு நடத்த அதிக வாய்ப்புள்ளது. பதவியேற்பு விழாவில் முதலில் முதல்வராக சசிகலா பதவியேற்பார். அவருக்கு பதவி ஏற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் கவர்னர் செய்து வைப்பார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.சசிகலா அதிமுகவில் 5வது முதல்வராகவும், பெண் முதல்வர்களில் 3வது முதல்வராகவும் பதவியேற்க உள்ளார். தற்போது எம்எல்ஏவாக சசிகலா இல்லை. இதனால், அவர் 6 மாதத்திற்கு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நன்றி – தினகரன்


