“தையே முதல் திங்கள், தை முதலே ஆண்டு முதல்”


தமிழ் ஆண்டு (திருவள்ளுவராண்டு)

நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.
’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்’
என்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.
நம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.
60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.

இன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.இந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042) என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.
தமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
மேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.

அறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல் திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.
திருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. திருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
தமிழர்களின் புனித நூலான திருக்குறளின் காலத்தைக் கணிப்பது மிகக்கடினமானதும், சர்ச்சைக்குரியதுமாகும். குறள் சங்கக் காலத்தைச் சேர்ந்தது இல்லை என்பது தமிழாய்ந்த அறிஞர்கள் முடிபு. குறளின் மொழி, முந்தைய நூல்களின் மேற்கோள் காட்டல், வட மொழிச் சொற்களின் பயன்பாடு, சமண மதத்தின் தாக்கம் ஆகியவைகளை வைத்துப் பார்க்கையில் திருக்குறள் சங்கக்காலத்திற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உணரலாம். திருக்குறளின் மொழியையும் இலக்கணத்தையும் பார்க்கையில் அந்நாளில் மொழி வளர்ந்த நிலையை அடைந்திருக்கும் நிலையை அறியலாம். அதனால் அந்நூல் கி.பி.400-கி.பி.500 ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தெளியலாம். குறள், திரு. சோமசுந்தர பாரதியார் (திருவள்ளுவர்), திரு இராசமாணிக்கனார் (தமிழ் மொழி வரலாறு) போன்றோர் கூறுவது போல் திருக்குறள் காலம் கி.மு.30-ம் அல்ல. திரு. வையாபுரிப் பிள்ளை (இலக்கிய மணி மாலை) கூறுவது போல் கி.பி.6-ஆம் நூற்றாண்டிற்குப் பிந்தியதும் அல்ல.
சங்க இலக்கியங்களில் இல்லாத புதிய இலக்கண முறைகளை முதன் முதலாகத் திருக்குறளில் காண்கிறோம். பன்மையை இறுதியில் குறிக்கும் ‘கள்’, உயர்திணையையும், அஃறிணையையும் குறிக்கும் பெயர்ச்சொற்கலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது (263-மற்றையவர்கள், 919-பூரியர்கள்), நிபந்தனை விகுதியான (Conditional Suffix) ‘ஏல்’ (368-உண்டேல், 655-செய்வானேல், 556-இன்றேல்), எதிர்மறை (Negative) உருபு (101,103-செய்யாமல், 1024-சூழாமல்). இது போன்ற புதிய சொற்களின் பயன்பாட்டால் திருக்குறளைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கருத முடியாது.
மேலும் திருக்குறளில் சங்க இலக்கியங்களைக் காட்டிலும் அதிகமான வடமொழிச் சொற்களை காணலாம். சுவலபில் அவர்கள் திருக்குறளில்
102 சொற்கள் வட மொழியிலிருந்து கடன் வாங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். அமரர் (121), அமிழ்தம் (11), ஆகுலம் (34), ஆசாரம் (1075), ஆதி (1), ஏமம் (306), கனம் (29), காமன் (1197), சிவிகை (37), தேவர் (1073) போன்ற பல வட மொழிச் சொற்கள் திருக்குறளிலுள்ளன. சுவலபில் எழுதிய ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற புத்தகத்தின் 170,171-ஆம் பக்கங்களில் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து வட மொழிச் சொற்களையும் பார்க்கலாம். ’பிறவிப் பெருங்கடல்’ எனும் சொல்லாட்சி வட மொழி நூலான ‘சம்சாரசாகரா’ எனும் நூலிலிருந்து எடுத்தது போலுள்ளது. சில குறள்கள் வடமொழி நூலான ‘மானவதர்மச்சாத்திரம்’ நூலிலிருந்து முழுமையாக எடுத்துக் கையாண்டது போலுள்ளன. எடுத்துக்காட்டாக, குறள் 43 — மானவ.III.72, குறள் 54 – மானவ.IX.12, குறள் 58 – மானவ. V.155 (Smile of Murugan, page 171). பெரு அளவிலான வட மொழிச் சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தி இருப்பதால் அவர், சங்கக் காலத்திற்குப்பின்புதான் வாழ்ந்திருக்கக்கூடும். எனவே திருக்குறளின் காலம் கி.பி. 400-450 என்று கணிக்கலாம்.
வள்ளுவர் வட மொழிச் சொற்கள் அதிகம் பயன்படுத்தியிருந்தாலும் வட மொழி நூல்களின் சில கருத்துக்களை கையாண்டிருப்பதாலும், அவர் வட மொழி நன்கறிந்தவர் என்பது தெளிவு. சில வட மொழிச் சொல்லாக்கங்களை அவர் பயன்படுத்தியிருந்தாலும் பெரும்பாலான சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே. அவரது படைப்பில் பெரும்பாலானவை வடமொழி-வடவர் பண்பாட்டிற்கும் முந்திய சங்கத் தமிழரின் பண்பாட்டையேக் காட்டுகின்றன. இன்பம் (அகம்) என்பது தமிழருக்கே உரிய ஒரு இலக்கிய நடை. இதற்கு ’இன்பத்துப் பால்’ என்கிற ஒரு பெரும் பகுதியையே அவர் எழுதியதிலிருந்து அவர் வடவர் பண்பாடும், தமிழர் பண்பாடும் அறிந்த மூதறிஞர் எனலாம்.
மீண்டும் திருவள்ளுவராண்டு விவாதத்திற்கு வருவோம். திருவள்ளுவர் காலத்தைத் தவிர 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்ச் சான்றோர்கள் எடுத்த முடிவில் எனக்கு உடன்பாடே. தமிழுக்கென ஒரு தொடராண்டு வேண்டும் என்கிற அப்பெரியோர்கள் கருத்தில் நான் உடன்படுகிறேன். வட மொழிக்கிணையான தமிழுக்குத் தமிழில் பெயரில்லாமல் வட மொழியில் பெயரிட்டு அதுவும் 60 ஆண்டு சுழற்சி முறையில் வழங்கி வருவது தமிழுக்கும் தமிழருக்கும் இழிவு. இதைப் போக்கத் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது சிறப்பானதே. திருவள்ளுவரின் காலத்தில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் திருக்குறளுக்கு மதிப்பளித்து திருவள்ளுவர் பெயரில் ஆண்டை நடை முறைப்படுத்துவதும் ஏற்கத்தக்கதே. அப்படி இதில் உடன்பாடு இல்லாவிட்டால் தமிழாண்டு என்று குறிப்பிட்டுத் தொடராண்டை வழங்கலாம்.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு, தைம் முதல்நாள், பொங்கல் நன்னாள்
-பாவேந்தர் பாரதிதாசன்.

Leave a Response