பைரவா – திரைப்பட விமர்சனம்


காதலிக்கப் போராடுவது என்கிற இடத்திலிருந்து காதலிக்காகப் போராடுவது என்கிற இடத்துக்கு வந்ததோடு அதிலொரு சமூகச்சிக்கலையும் கலந்து கொடுத்து தன் ரசிகர்கள் மட்டுமின்றி வெகுமக்களின் மதிப்பையும் பெறும்முயற்சியில் விஜய் தேர்வு செய்திருக்கும் கதைதான் பைரவா.

இந்தப் படத்தில், மருத்துவக் கல்லூரி முறைகேட்டை அம்பலப்படுத்துவதோடு கல்லூரி நடத்துகிறவர்களுக்கு ஒரு தகுதி வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் விஜய்.

வாராக் கடன்களை வசூலிக்கும் வங்கிப் பணியில் இருக்கிறார் விஜய். கடனை திருப்பித் தராமல், அலைக்கழிக்கும் நபர்களிடம் விடாது விரட்டிப் பிடித்து பணத்தை வசூல் செய்து வங்கியில் ஒப்படைத்து நல்ல பெயர் வாங்குகிறார்.

நாயகி கீர்த்தி சுரேஷை சந்தித்ததும் காதல் வயப்படுகிறார். கீர்த்திக்கு ஒரு ஆபத்து. அந்த ஆபத்து என்ன? அதற்கான பின்புலம் என்ன? கீர்த்தி சுரேஷை ஆபத்திலிருந்து மீட்டாரா? என்பதுதான் படம்.

‘அழகிய தமிழ் மகன்’ படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து பரதன் இயக்கிய படம் ‘பைரவா’. மருத்துவக் கல்லூரி முறைகேடுகள், கல்வித்தந்தைகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை கமர்ஷியல் சினிமாவில் சொன்ன விதத்தில் இயக்குநர் பரதன் கவனிக்க வைக்கிறார்.

விஜய் முன்பை விட மெலிதாக, இளமையாக இருக்கிறார். அவரது சுறுசுறுப்பும், உடல் மொழியும் வழக்கம்போல. வசன உச்சரிப்பிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.

‘இன்னைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத ஒரு கெட்டப்பழக்கம் என்கிட்ட இருக்கு. சொன்ன வார்த்தையைக் காப்பாத்துறது’, ‘தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்குதான் அல்லு அதிகம்’ என்று விஜய் பேசும் பன்ச் வசனங்களுக்கு தியேட்டரில் வரவேற்பு.

கீர்த்திசுரேஷ் கதாபாத்திரத்தின் தேவை உணர்ந்து மிகச் சரியாக நடித்திருக்கிறார். தான் யார் என்பதை பிளாஷ்பேக் காட்சியில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய விதத்தில் சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்திருக்கிறார். கதை நகர்த்தலுக்கும், கதைக்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் கீர்த்தி சுரேஷ் உதவி இருக்கிறார்.

ஜெகபதிபாபு, எதிர்மறை கதாபாத்திரத்துக்குச் சரியாக இருக்கிறார். சரத் லோகிதஸ்வா, ஒய்.ஜி.மகேந்திரன், அண்ணி மாளவிகா, , ஹரீஷ் உத்தமன், ஸ்ரீமன், நரேன், சண்முகராஜா, மாரிமுத்து, டேனியல் பாலாஜி சதீஷ், தம்பிராமையா ஆகியோர் நகைச்சுவைப் பகுதிக்கு உத்தரவாதம் தருகிறார்கள். சிஜா ரோஸ். நான் கடவுள் ராஜேந்திரன், மைம் கோபி ஆகியோரும் இருக்கிறார்கள்.

சுகுமாரின் ஒளிப்பதிவு நேர்த்தி. சந்தோஷ் நாராயணன் இசையில், வர்லாம் வர்லாம் வா பைரவா பாடல் பட்டையக் கிளப்பும் பாடல்.

விஜய்யின் நட்சத்திர பிம்பம் படத்தைக் காப்பாற்றுகிறது.

Leave a Response