ஜல்லிக்கட்டு நடக்கும். எப்போது? எங்கே? என்பதை நடந்த பிறகு தெரிந்துகொள்ளுங்கள் – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று (09.01.2017) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னதிலிருந்து….

மெரினா கடற்கரையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜியின் சிலையை வருகிற 18-ந் தேதிக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு விபத்துகள் நடப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் எவ்வளவோ சாலைகளில் நடுரோட்டில் சிலைகள் உள்ளன. சென்னையில் மன்ரோ சிலைகூட நடுரோட்டில்தான் உள்ளது. இப்படி சிலைகள் இருக்கும் பகுதியில் நடக்கும் விபத்தை காரணம் காட்டி அத்தனை சிலைகளையும் அகற்றுவார்களா?

சிவாஜி சிலையை நிறுவும் முன்னரே அது பற்றி யோசித்திருக்க வேண்டும். சிலை நிறுவப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதனை அகற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மண்ணின் பெருமைமிகு அடையாளம் சிவாஜி. வ.உ.சி பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், பகத்சிங், கொடிகாத்த குமரன் உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை வரலாற்று நாயகர்களாக நம் கண் முன்னால் நிறுத்திய பெருமை சிவாஜியையே சேரும். இந்த மண்ணின் மைந்தனான அவரது சிலையை அகற்றுவது என்பது தேசிய அவமானமாகும்.

மெரினாகடற்கரையில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகிய தலைவர்களுக்கு நினைவிடம் உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எத்தனையோ சிலைகளும் கடற்கரையில் உள்ளன. அப்படி இருக்கும் போது சிவாஜி கணேசனின் சிலையை மட்டும் அங்கிருந்து அகற்றி அவரது நினைவு மண்டபத்தில் வைக்க முடிவு செய்திருப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது. சிவாஜியின் மணிமண்டபத்தில் வேறு சிலையை வைத்துக் கொள்ளலாம்.

மெரினாவில் உள்ள சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து அகற்றினால், அதற்கு பதிலாக மெரினா கடற்கரையிலேயே வேறு இடத்தை பார்த்து அங்கேயே நிறுவ வேண்டும் இல்லையென்றால் நாம்தமிழர் கட்சி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என்று உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர உள்ளோம்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. எனவே அவசர சட்டம் இயற்றி, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முன்வரவேண்டும்.

இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம். ஆனால் எப்போது, எங்கே நடத்தப்படும் என்ற தகவலை நான் முன்கூட்டியே அறிவிக்கப்போவதில்லை.

கடந்த முறை தெரியப்படுத்தியதால்தான், என்னைக் கைது செய்தார்கள். இம்முறையும் என்னைக் கைது செய்யலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடந்தபிறகு என்னைக் கைது செய்துகொள்ளுங்கள்.

கேரளாவில் யானைகளை ஓடச்செய்து போட்டிகள் நடத்துகின்றனர். ராணுவத்தில் ஒட்டகம், குதிரை போன்ற விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன. இதெல்லாம் பீட்டா அமைப்புக்குத் தெரியவில்லையா?

ஜல்லிக்கட்டு என்பது உண்மையில் ஏறு தழுவல்தான். காளைகளை அணைத்து விளையாடும் போட்டி இது. அது உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவோம். அதன் பின்னர் எங்கள் மீது நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள்.

உழவு இல்லையென்றால் உணவு இல்லை. தமிழகத்தில் வறட்சியால் 10 நாளில் 100 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதனை தமிழக அமைச்சர்கள் கொச்சைப்படுத்தும் விதத்தில் கருத்துக்களை பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளுக்கு தேவையான இழப்பீட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Response