பேத்திக்குப் பிறந்தவள் பாட்டி என்கிறார் வைகோ-பெ.மணியரசன் பதிலடி

திராவிடத்தின் பரிணாம வளர்ச்சி தான் தமிழ்த்தேசியமா?

வை.கோ.விற்கு பெ.மணியரசன் பதிலுரை!

நாம் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். அதுபோல் தமிழ்த்தேசியத்தை விமர்சனம் செய்யத் திராவிட இயலார்க்கு உரிமை உண்டு. இந்த விவாதங்களின் வழி சரியான கருத்துகள் தமிழர்களுக்குப் போய்ச் சேரட்டும்.

தமிழ்த்தேசியம் பேசும் தோழர்கள் சிலர் பெரியார், வைகோ போன்ற தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் நாம் விமர்சிப்பதை ஏற்கவில்லை.

திராவிடத்தின் பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த்தேசியம் என்று வைகோ கூறுவது, பேத்திக்குப் பிறந்தவள் பாட்டி என்று கூறுவது போல் உள்ளது. சங்க இலக்கியத்தில் தமிழும் தமிழரும் குறிக்கப்பட்டுள்ளனர்; அதில் திராவிடம் இல்லை.

வரலாற்றில் திராவிடம் என்ற பெயரில் மொழியும் இருந்ததில்லை; தாயகமும் இருந்ததில்லை; ‘திராவிடம்’ என்ற சொற்கோவை, கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்களின் கைச்சரக்கு! ஆரிய நூல்களான மனுஸ்மிருதி, குமரிலபட்டர் உபநிஷதம் போன்றவற்றில் இருந்து கால்டுவெல் கடன் வாங்கிய சொல்தான் ‘த்ராவிட’ என்பது.

இப்போதும் கூட கும்பகோணம் பிராமணர் குடும்பத்தைப் பூர்விகமாகக் கொண்ட கர்நாடக மட்டைப் பந்து வீரர் ‘ராகுல் த்ராவிட்’ ஆரியச் சான்றாகத் தம் பெயரில் திராவிடத்தைத் தாங்கி வலம் வருகிறார்.

இயல்பாகத் தமிழ் மண்ணில் வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்த் தேசியத்தைத் துளிர்விடத் துளிர்விடக் கருக்கியது திராவிடக் கருத்தியல்.

திராவிடக்கோடரி கொண்டு தமிழ்த் தேசியத்தை வெட்டிய பிதாமகர் பெரியார். தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று ஏசியதுடன், வீட்டில் மனைவியிடமும், வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசிப் பழகுங்கள் என்றார், 1938இல் தமிழ்நாடு தமிழர்க்கே என்றவர் 1939இல் திராவிடநாடு திராவிடர்க்கே என்றார்.

‘தமிழர்’ என்பது கலப்பட இனம், ‘திராவிடர்’ என்பது அசல் இனம் என்ற பெரியார், காமராசரைப் ‘பச்சைத்தமிழர்’ என்று பாராட்டினார். அவர் சொல்வதில் எதை ஏற்றுக் கொள்வது?

அண்ணாவும் அண்ணன் வைகோவும் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தாலும் தமிழினப் பெருமிதங்களைப் போற்றுவோர்; தமிழின உணர்ச்சியை வளர்த்தோர்.

தி.மு.க.விலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சி தொடங்கிய ஈ.வெ.கி.சம்பத், “தி.மு.க.வில் திராவிடம் பேசினாலும், தமிழினப் பெருமைகளைத்தான் பேசி, தமிழ் மக்களிடம் உணர்ச்சி ஊட்டினோம்; சேர, சோழ, பாண்டியர் பெருமைகளைத் தான் பேசினோம். கிருஷ்ண தேவராயர் பெருமைகளைப் பேசவில்லை. நாம் சொன்ன திராவிடத்தை ஆந்திராவிலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ யாரும் ஏற்கவில்லை; தமிழர்கள் மட்டும்தான் ஏற்றார்கள்” என்றார்.

இப்பொழுதும் ஆசிரியர் கி.வீரமணி, அன்புத்தோழர் கொளத்தூர் மணி போன்ற பெரியாரியவாதிகள் தமிழ்த்தேசியத்தை முறியடித்து விட்டு மறுவேலை பார்ப்போம் என்று கச்சைகட்டிக் களம் இறங்கியுள்ளார்கள்.

இந்த நிலையில், திராவிடத்தின் அடுத்தகட்டப் பரிணாம வளர்ச்சிதான் தமிழ்த் தேசியம் என்று வைகோ அவர்கள் வாதம் செய்வதில் சத்தில்லை; சாரமில்லை.

நம்மைப் பொறுத்தவரை, தமிழ்த்தேசியமா திராவிடமா என்பதில் தருக்கம் நடக்கட்டும் தனிநபர் தாக்குதல் இல்லாமல்! தகுதி உடையது தங்கும், வளரும்!

நன்றி: ‘தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்’ இதழ். சனவரி 1- 15, 2015 இதழில் நிகரன் விடைகள்.

Leave a Response