ஒரு போராட்டம் உலகத்தால் ஏற்று கொள்ளப்பட வேண்டும் என்றால் மக்கள் தடைகளைக் கடந்தும் தமக்கான நீதிக்காக தொடர்ச்சியாகப் போராடுவதால் முடியும்.
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்தி தடைசெய்த இந்த உலகம் இப்பொழுது தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தால் எம் போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் மக்கள் போராட்டமே எம் போராட்டம் என்பதையும் உணர்ந்து அதை மதித்து ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தனது பார்வையைச் சரி செய்து இருப்பது மக்கள் போராட்டத்தின் வெற்றியே எனலாம்.
ஐரோப்பா முழுவதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை நீங்குகிறது என்ற செய்தி உலகத் தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும். அவர்கள் மேல் கூறப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய ஒன்றியம் முன் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க தமிழ் மக்களை மகிழ்ச்சியடைய வைக்கும் செய்தியாகும்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய நீதிமன்றின் மூத்த நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சமர்பித்தார். இப்பொழுது இந்த தடையை நீக்கப் போகும் சுற்றறிக்கை விரைவில் வர இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன.
இந்த செய்தி வெறுமனே விடுதலைப்புலிகளின் மேல் நன்மதிப்பை ஈட்டித் தரும் செய்தி அல்ல. தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களையும் நீதியான மக்கள் எழுச்சி போராட்டமே விடுதலைப்புலிகளின் போராட்டம் என்ற உண்மையையும் சர்வதேசம் உணர்ந்து வருகிறது என்பதைக் குறிக்கும் செய்தியாகும்.
அத்தோடு மக்களுக்கான தேவைகள் உள்ளவரை போராடும் தேவையும் இருக்கும் என்பதையும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் தமிழர் தரப்பில் நீதியானவை என்பதையும் இந்த உலகம் உணர்ந்து ஏற்று தமிழரின் விடுதலையை ஆதரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கும் இந்தச் செய்தி ஒரு குறியீடாக இருக்கும்!
அயராத மக்கள் போராட்டங்கள் தடைகளைத் தகர்த்து முன்னேறும்!
-செந்தமிழினி பிரபாகரன்