பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா முழுவதும் வெளியான படம், மட்டைப் பந்தாட்ட வீரர் (கிரிக்கெட்) எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில், நீரஜ் பாண்டே இயக்கத்தில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்து வெளியாகி இருக்கிறது.
சிறுவயதிலிருந்தே தோனிக்கு விளையாட்டில் ஆர்வம். கால்பந்தாட்டத்தில் கோல் கீப்பிங் சிறப்பாகச் செய்வதைப் பார்க்கும் பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி தோனியை மட்டைப்பந்தாட்டத்தில் விக்கெட் கீப்பிங் செய்யச் சொல்கிறார். அங்கிருந்து தோனியின் மட்டைப்பந்தாட்ட வாழ்க்கையும், படத்தின் கதையும் ஆரம்பிக்கிறது.
கிரிக்கெட் ஆட வந்த பிறகு, விறு விறுவென வளர்கிறார் தோனி. தோனி ஆட வந்தால் எதிரணி மிரள்வதும், பந்துகள் பறந்து தொலைவதும், ஆட்டத்தை பார்க்க பள்ளி மாணவர்கள் கூடுவதுமாக படம் போகிறது.
ஒரு கட்டத்தில் ரயில்வே அணிக்கு ஆட வாய்ப்பு கிடைக்கிறது. அதில் விளையாடியதால் ரெயில்வேயில் வேலை கிடைக்கிறது. அப்பாவுக்காக வேலைக்குச் செல்கிறார் தோனி. ஆனால் வேலை அவருக்கு பிடிக்காமல் வேலையை விட்டுவிடுகிறார்.
தோனி எப்படி இந்திய அணிக்குள் வந்தது எப்படி? தோனியின் முதல் காதல் என்னவானது? திருமணம் நடந்தது எப்படி? இந்திய மட்டைப்பந்தாட்ட அணித் தலைவராக என்னவெல்லாம் செய்தார் என்பதையெல்லாம் நீட்டி முழக்கிச் சொல்லியிருக்கிறார்கள்.
தோனியாக நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட், தோனியின் முன்னாள் காதலி வேடத்தில் நடித்திருக்கும் திஷா படானி ஆகியோர் நடிப்பு பொருத்தமாக இருக்கிறது. தோனி- பிரியங்கா காதல் அத்தியாயம் கொஞ்ச நேரமே வந்தாலும் நன்று.
ஹெலிகாப்டர் ஷாட் ஆட நண்பனிடம் இருந்து தோனி கற்றுக்கொள்ளும் காட்சிக்கு நல்ல வரவேற்பு.
அந்த கரக்பூர்ல ஜாப் செக்யூரிட்டில மாட்டிக்கிட்டா அதுக்கப்பறம் என்னால இதுவே செய்ய முடியாதுப்பா’ , “லைஃபும் கிரிக்கெட் மாதிரிதான். எல்லா பாலும் அடிக்கற மாதிரி வராது” போன்ற சில வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.
எம்.எஸ். தோனியின் கதை, நீரஜ்பாண்டே இயக்கம் என்று படத்துக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அங்கங்கே சில சுவாரசியங்கள் இருக்கின்றன. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.