சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் : நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை,செப்.17 (டி.என்.எஸ்) சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருச்சியைச் சேர்ந்த வெற்றிவேல், என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

குளிர்சாதன வசதி உள்ள தியேட்டர்களில் அதிகபட்சமாக 50 ரூபாயும், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் அதிக பட்சமாக 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவுக்கு புறம்பாக திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் தனபாலன், வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், எந்தெந்த தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு அந்த தியேட்டர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.

Leave a Response